இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Tuesday, April 13, 2021

பொண்டாட்டி-அராத்து


ஆண் பெண் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு சிக்கலை வைத்து எழுதப்பட்ட ஒரு ஜாலியான செக்ஸியான செறிவான என்ன மொழி நடை கொண்ட நாவல். தீவிர இலக்கியம் படித்து மண்டை சூடு ஏறிய (18+) வாசகர்கள் வாசிக்கலாம். ஆனாலும் புத்தகம் முழுவதும் செக்ஸ்யே.... நினைத்து கொண்டு இருக்க வேண்டி உள்ளது அது சிறு நெருடல் தான். ஒரு நாவல் தன்னை fake என்று அழைத்துக் கொள்வதால் இதன் கதை , காலம் , நவீன துவமா , பின்நவீனத்துவமா , ஆணாதிக்கமா , பெண்ணாதிக்கமா, என்று குழப்பிக்கொள்ள தேவையில்லை . மொழி நடை எடுத்தால் கீழே வைக்க வேண்டிய எண்ணமே வராது.நாவல் முழுவதும் குறி பற்றி வருவதால் குறியீடு பற்றியும் யோசிக்க வேண்டாம். பொற்செல்வி போன்ற பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான் அதே நேரம் தீப்திகா, தீப்தி, தீப்து, தீபு, தீப்... போன்ற வைப்பாட்டி தேவைப்படுவதால் ஜெயமோகன் போன்றவர்கள் அவர்களின் வாழ்வை பலியிடுகிரார்கள். நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளில் 30 சதவீதத்திற்கு மேல் டைவர்ஸ் வழக்குகளாக உள்ளது இந்த வழக்குகள் அனைத்தும் ஆதிரையை லக்ஸ் எப்படி நடத்துகிறோமோ அதேபோல குற்றச்சாட்டுக்கள் உடையவை. ஒரு பெண்ணை முதலிரவின் போது எப்படி அணுக வேண்டும் என்பது கூட தெரியாமல் அந்த பெண்ணை முதல் இரவிலேயே வன்கலவி செய்து போடுகிறார்கள் கலவியில் ஈடுபடும் போது அடிக்கிறார்கள் சிகரெட்டால் சுடுகிறார்கள்.  இதில் லக்ஸ் ஒருபடி மேலேபோய் அதிரையை அவளின் அப்பா அருகில் இருந்து சுய இன்பத்திற்கு வீடியோ காலில் வரும்படி அழைக்கிரான்.  பாலியலை எந்த அளவுக்கு மறைமுகமாக ஆக்குகிறோமோ  அந்த அளவிற்கு அது பாலியல் குற்றங்களாக  வெளிப்படுவதாக எனக்கு படுகிறது.ஒரு சமூகம் புனித்தால்  கெட்டு சீரழிகிறது என்பது முக்கியமான செய்தி . இதுவரை எந்த விதமான பாலியல் அறிவும்  அல்லாமல் இணையத்தில் ஹார்ட்கோர் புரோன் பார்த்துவிட்டு முதலிரவை எதிர்கொள்ளும் ஒருவன் ரேப்பிஸ்ட்  போல தான் நடந்துகொள்வான். நாவலின் தொடக்கத்தில் யார் யாருடன் உறவு வைத்துக் கொண்டார்கள் யாருக்கு யாருடன் தொடர்பு என்பது பெரும் குழப்பமாக தோன்றலாம் நாவல் போகப்போக அனைத்து குழப்பங்களும் அவிழ்க்கப்படுகிறது. கதை இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்று முன்னும் பின்னும் சென்று வருவதால் சிறு குழப்பம் ஏற்படலாம்  இது ஒரு பின் நவீனத்துவ பாணி , ஆத்தாவை(அம்மன் கோவிலில்) நீயும் பொண்டாட்டி தானே உனக்கும் பீரியட்ஸ் வரும் தானே என்றெல்லாம் வம்புக்கு இழுப்பதும் இந்த பாணி தான். இதில் விளிம்புநிலை மக்களின் சிக்கல்கள் குறைவாகவே வருவதால் இந்தை மேட்டுக்குடிகளின் நாவல் என்று அழைக்கலாம் என நினைக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட சின்னவீடு என்று வெளிப்படையாக வைத்துக்கொண்டார்கள் இன்று அவை மறைமுகமான கள்ள உறவு என்று வளர்ந்து நிற்கிறது. தொடக்கத்தில் வரும் சின்னைய்யா பெரியய்யா நடுயய்யா  அவர்களின் காலகட்டத்தில் டீக்கடையிலும் அந்த ஊரிலும் பாலியல் குறித்த பேச்சுக்கள் சகஜமாக வருகின்றன உதாரணம் டீக்கடை மணி . போற்செல்வியின் பூப்பெய்திய விழாவில் கூட அவர்கள் அவ்வாறாக பேசிக் கொள்கிறார்கள் ஆனால் பொற்செல்வியின் மகள் காலகட்டத்தில் அதாவது தற்போதைய காலகட்டத்தில் ஒரு வார்த்தை கூட பாலியல் சார்ந்த வார்த்தைகள் பேசப்படவில்லை அத்தனையும் மறைமுகமாக இருக்கிறது குற்றங்களாக ஆகிறது. குறியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கூட பெருவாரியான ஆண்கள் அழியாதது. ஒரு பெண்ணுக்கு ஆணின் மீது ஈர்ப்பு ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதும் ஈர்ப்பும் இயல்பாக இருக்க வேண்டியவை ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் இத்தனை முரண்பாடுகளும் சிக்கல்களும் எழுகின்றன என்பது எவ்வளவு யோசித்தாலும் எனக்கு பிடிபடாதவையாக இருக்கிறது.  90's க்கு முன் பிறந்தவர்கள் இதைப் படித்து வீணாக ஹார்ட் அட்டாக்கை வர வைத்துக்கொள்ள வேண்டாம். அப்புறம் எழுத்தாளரை அறிமுகப்படுத்தும்போது அனைத்து இடங்களிலும் இவர் நீயா நானாவில் கலந்து கொண்டவர் என்கிறார்கள் நீயா-நானா அவ்வளவு பெரிய அறிவியக்கமா போல இங்கே  என்ன எழவோ .. 

Wednesday, February 3, 2021

கொரில்லா - ஷோபாசக்தி

 

நன்றி நூலக திட்டம் : www.noolaham.org

இன்று ஐரோப்பிய வீதிகளில் எந்த ஒரு ஈழத்தமிழன் சுற்றித் திரிந்தாலும் அவனுக்குப்பின்னால் போரினால் பாதிக்கப்பட்ட கதை ஓண்டு இருக்கும். அப்படித்தான் யா. அந்தோணிதாசன் தன்னுடைய கதையை கதைக்கிறன். தனது அகதி விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும்படி பிரான்ஸ் அரசுக்கு விண்ணப்பம் போடுகிறான். தன் நாட்டை விட்டு வெளியேறியது குறித்த காரணங்களை சொல்லும் போது ஆமிக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் சிக்கியவர்களின் பரிதாப நிலை விளங்குகிறது. புலிகள் இயக்கம் மற்ற போராளி இயக்கங்களை தன்னோட வளர்ச்சிக்காக கொலை செய்தது, அங்கிருந்த இஸ்லாமியர்களை வெறும் 500 ரூபாயோடு அந்த நிலத்தில் இருந்து வெளியேற்றியது, இயக்கத்திற்கு பணம் கொடுத்து உதவினார்கள் என்ற காரணத்திற்காக மணல் கொள்ளையர்களை அனுமதிப்பது, சிறுவர்களை கரும்புலிப் போராளிகளாக இயக்கத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வைக்கிறது இந்த நாவல்.IPKF ஈழம் சென்றபோது இத்தனை வருடங்களாக சிங்கள ராணுவம் செய்த கொடுமைகளை வெறும் இரண்டே நாட்களில் நிறைவேற்றுகிறது. கற்பழிப்பு, கொலைகள், உடமைகளை அழித்தல் என்று மோசமான இராணுவ அடக்குமுறைகளை IPKF  நிகழ்த்துகிறது. IPKF மீது புலிகள் நடத்திய இறுதி தாக்குதலில் 15 வயது சிறுமி கரும்புலியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார். காலப்போக்கில் புலிகள் இயக்கம் தீவிரவாத வலதுசாரி தன்மைகொண்டதாக மாறுகிறது.

"இனி காந்தியே தோன்றினாலும் புலிகளின் இயக்க தலைவரின்  வேட்டில் இருந்து தப்பிக்க முடியாது "

" துவக்கு அங்க சுட்டு இங்க சுட்டு கடைசியில சும்மா இருக்கவனையும் சுடும் "

(நாவலில் இருந்து)

தமிழகத்தில் உள்ளது போலவே சற்றும் குறைவில்லாத ஜாதிய படிநிலைகளும் சாதிய அடக்குமுறைகள் அங்கு இருந்தது. காளை வண்டி போட்டியில் வெற்றி பெற்ற கீழ் சாதிகாரன் என்பதால் மலையை அவன் கழுத்தில் போடாமல் மாட்டு கழுத்தில் போடுவதாக வருகிறது. இதை ஒழிப்பதற்காக புலிகள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் இந்த நாவல் வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது. ரொக்கிராஜ் இயக்கத்தில் சேர்ந்த பிறகு அதன் காரணத்தாலேயே அவரின் குடும்பமும் அவனின் வாழ்க்கையும் எவ்வாறு சிதைகிறது என்பதையும் அவனின் அப்பா கொரில்லாவிற்கும்  அவனுடைய  இடையே இருக்கும் எதிரெதிர் குண போராட்டம் சிறப்பாக வந்துள்ளது. வெட்டுவோன் கொத்துவோன் எண்டு இருக்கும் அப்பான் மகன். ரொக்கிராஜ் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சட்டை வாங்கி கொடுக்கும் இடம், லௌதிக விதிகளை மீறி நடக்கும் கொரில்லா புனைவில் மிளிர்கிறார்கள். பின் பகுதி கற்பனையானவை. நாட்டுல தான்  இயக்கங்களுக்குள் கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற அகதிகளும் குழு மோதலால் கொலை செய்து கொள்கிறார்கள். சாதி பார்த்து பழகுகிறார்கள். இந்த நாவலில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இறந்து விடுகிறது இராணுவத்தால், இயக்கங்களால்,  மற்றவர்களால் கொல்லப்படுகிறார்கள். மனிதனிடம் அதிகாரம் குவியும் போது அவனுடைய குரூரத்தின் எல்லைக்கு அளவே இல்லாமல் ஆகிறது.
Lord byron எத்தனை பொருத்தமான வரியை தன் கவிதையில் சொல்கிறார். "மனிதன் அதிகாரத்தால் சீரழிந்தவன்"

மரணங்களின் செய்தி கூடக்
கிட்டாததொலைதீவில்
ஏக்கங்களையும் துக்கங்களையும்
கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்
காத்திருக்கும் மக்கள்...
கடலம்மா நீ மலடி
ஏனந்தத் தீவுகளை
அனாதரவாய்த் தனியேவிட்டாய்?


5.குஞ்சன்வயல்   கடற்கரையே ரெத்த வெடில் பிடிச்சுது  ஒவ்வொரு வாகனமாய் ஓடி ஓடி ரொக்கிராஜ் பிரேதங்களைப் பார்த்தான். அவனால் நிலத்தில் நிக்கக்கூட ஏலாமலுக்கு  தலை சுத்தி அப்படியே ரோட்டில் இருந்திற்றான். குழந்தை, குஞ்சு, குருமன் ,ஆம்பளையள், பொம்பளையள், எண்டு  எல்லாமாய் ஐம்பது சொச்சம் பிரேதங்கள்.

6.எல்லாரையும் வெட்டித்தான்  கொலை செய்திருக்கிறார்கள் கையில்லாமல் ,கால் இல்லாமல், தலையில்லாமல் , கைக்குழந்தையை கட்டிப்பிடிச்சுக்கொண்டு கிடந்த பிரேதங்களை தோணியிலே ஏற்றினார்கள் .

7. ஒரு பச்சைப் பாலகனுக்கு பிறந்து ஆறு மாதம் கூட இருக்காது நெஞ்சில வாளல குத்தி அந்த பிள்ளையின்ர ஆணுறுப்பை அறுத்து அந்த பாலகன்ர வாய்க்குள்ள ஆணுடம்பை அடைஞ்சு வைச்சிருக்கிறாங்கள், லோஞ்சியல பயணம் செய்த ஒருத்தரும் உயிரோடு தப்பயில்ல எல்லாரையும் வெட்டிச் சரிச்சுப் போட்டுத்தான் போயிருக்கிறாங்கள்.

(நாவலில் இருந்து)...


Thursday, January 21, 2021

சிறுகதை தொகுப்பு



தஞ்சைச் சிறுகதைகள்-சோலை சுந்தரபெருமாள்(தொகுப்பு)
பக்கங்கள் - 499
Kindle book

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களான 32 பேரின் சிறுகதைகளை எழுத்தாளரின் சிறிய அறிமுகத்தோடு தொகுத்திருக்கிறார். அனைத்து கதைகளும் தஞ்சை கிரம வாழ்வை அடிப்படையாக கொண்டவை. 80துக்கு முன்னதான கதைகளம். 

1)பட்டுவின் கல்யாணம்- கா. சி. வேங்கட மணி

சுப்பிரமணிய சாஸ்திரியார் அரசாங்க அதிகாரி பனைமரங்களும் பொறுப்பாளர் சாலவேடு ரேஞ்சுக்கு மாற்றலாகி வருகிறார். அந்தப் பகுதிக்கு வந்து விட்டால்  சிறிய குட்டி குபேரன் ஆகவே ஆகிவிடலாம் என்பது மக்கள் மொழி. மனைவியோ அவருக்கு கொடுத்த பட்டம் பிழைக்கத் தெரியாதவர், மகளுக்குப் பன்னிரண்டு வயதாகிறது இன்னும் திருமணம் செய்துவைக்க எண்ணமில்லை என்று கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறாள் இலட்சக்கணக்கான பனை மரங்களுக்கு இவர்தான் அதிகாரி மரம் ஒன்றுக்கு ஓரணா  இவருடைய வருமானம் அதில் பலருக்கு படியளக்க வேண்டும் கையில் சல்லிக்காசு இல்லாமல் மகளின் திருமணத்தை எப்படி நடத்துவது என்று திட்டம் தீட்டுகிறார், பனை மரங்களுக்கு எண் இடுவதின் மூலம்  குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்றும் அதன் வழியாக மகளின் திருமணத்தை நடத்தி விடலாம் என்று திட்டம் போட்டு வரன் பார்க்கச் செல்கிறார் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை. 1937ல்  எழுதப்பட்ட இக்கதை அக்கால மக்களின் வாழ்க்கை நிலையும், பூப்பெய்தியதும்  பெண்களுக்கு திருமணம் செய்தாக வேண்டும் என்ற கட்டாயமும், அரசாங்க அதிகாரிகளின் பாடுகளும் சிறப்பாக உணர முடிகிறது.

2).வண்ணார வீரம்மாள் - வ.ரா
முற்போக்கு எழுத்தாளராக அறியப்படும் இவர் பூணூல் ஆச்சாரங்கள் கொண்ட ஒருவருக்கும் வண்ணார பெண்ணான ஒருவருக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார் சிறுகதைகளுக்கு உரிய இறுதி திருப்பம் இக்கதையை மேலும் வலுப்படுத்துகிறது.

3). கு. ப.ராஜகோபாலன்- விடியுமா

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய காயத்திற்கு  'காலம்' தான்  சிறந்த மருந்து, வாழ்க்கையில் அதிமுக்கியமான ஒன்றாக நாம் நினைத்துக் கொண்டு கண்ணீர் விட்டதை சிறிது காலம் கழித்து நினைத்துப் பார்க்கும்போது நமக்கே வேடிக்கையாக இருக்கும். இதுவே இக்கதையின் மையம். சிவராமையர் டேஞ்சரஸ் என்ற தந்தி கண்டு அவரது உறவினர்கள் சென்னைக்கு புறப்படுகிறார் சென்னை சென்று அவரைப் பார்த்தார்களா என்பது தான் மீதிக்கதை. ரயிலில் பயணம் செய்யும் போதும் தந்தி கிடைத்த உடனேயும் இவர்கள் படும் துக்கம் தாளாது ஆனால் காலம் என்னும் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று படித்து பாருங்கள்.

4). கோபுர விளக்கு - தி. ஜானகிராமன்

பெண்களை ஒரு சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தை நாம் எளிதாக மதிப்பிட முடியும். இளமையில் கணவனை இழந்த ஒரு பெண்ணின் பொருளாதார தேவைக்கான அனைத்து வழிகளையும் இச்சமூகம் எழுந்து வந்து அடைத்து விடுகிறது, சிலர் தங்கள் பாலியல் சுய தேவைக்காக தங்கள் கதவுகளின் தாழ்வை நீக்கி அவர்களை உள்ளே அழைக்கிறார்கள். ஒரு பெண் பாலியல் தொழில் செய்கிறார் என்பதை ஜனகிரமன் இவ்வாறு எழுதுகிறார்
 "ஈச்வரி! இரண்டு நாளாக வயிறு காயறது. இன்னிக்காவது கண்ணைத் திறந்து பார்க்கணும். தாராள மனசுள்ளவனா... ஒருத்தனைக் கொண்டு விட்டுத் தொலைச்சா என்னவாம்...?"
இதை படித்ததுமே தர்மு பாலியல் தொழில் செய்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது இதை சொல்வதற்கு பல வழிகள் இருந்தாலும் எழுத்தாளர் எவ்வளவு நுட்பமாக இதை உணர்த்துகிறார். இப்படி பாலியல் தொழில் செய்ததால் தர்மு கர்ப்பம் ஆகிவிடுகிறாள், கர்ப்பத்தை கலைக்க அவளின் தாய் முயற்சி செய்யும் போது அவள் இறந்து விடுகிறாள் அவர் இறந்த பிறகு அவனுடைய பிணத்தை தூக்குவதற்கு கூட ஊரிலிருந்து யாருமே சொல்லவில்லை ஊரே அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இருக்கிறது. கதை இப்படி முடிகிறது
"" இருட்டில் தட்டித் தட்டி கிழக்கு வீதி வெளிச்சத்திற்கு வந்தோம்.""
சமூகமே இருட்டில் கிடந்து கொண்டு பிறர் மீது குற்றம் சுமத்தி கொண்டிருப்பதாக குறியீடு மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

5). வாழ முடியாதவர்கள் - மு. கலைஞர்

கலைஞர் தமிழகத்தில் முத்தமிழ் அறிஞர் என்று போற்றப்பட்டாலும்  இலக்கிய உலகம் அவரை தூக்கி வெளியில் எறிந்து இருக்கிறது என்பதுதான் உண்மை. திலோத்தமை திரைப்படம் பார்த்துவிட்டு வந்த திருமணமாகாத மகளும் மறுமணம்  செய்ய முடியாத தந்தையும் அன்று இரவு உடலுறவில் ஈடுபடுகிறார்கள். இதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் புராண இதிகாசம், கடவுள்கள், முற்போக்கு, வறுமை என்று பல பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் எழுத்தாளர். என்ன எழவு ஐய்யா இதெல்லாம்?.

6).பற்றி எரிந்து விழுந்த தென்னை மரம் - தஞ்சை பிரகாஷ்

லோச்சனா விற்கு குஷ்ட நோய் வந்தபிறகு அவளுடைய உறவினர்கள் அவளை ஒதுக்கி வைக்கிறார்கள். அவள் காவிரி ஆற்றைத் தாண்டி ஓரிடத்தில் தன்னந்தனியாக தானே செங்கல் அறுத்து தனக்கு பிடித்தது போல ஒரு வீட்டைக் கட்டிக் கொள்கிறாள், வீட்டை சுற்றி திருக்கள்ளி சப்பாத்திக்கள்ளி ஒற்றைக்களி என்று  செடிகளாக வைத்து வளர்க்கிறாள். குஷ்ட ரோகத்தை மறைப்பதற்காக பெயிண்ட்டை வாங்கி தன் உடல் முழுவதும் இலைகளும் கொடிகளும் வரைந்து கொள்கிறாள். ஆனால் இந்த சமூகம் அவள் முன் எழுப்பும் கேள்வி நீ நோய் வந்தபின் மருத்துவமனையில் ஒரு அறையில் சுருண்டு கிடக்காமல் இப்படி தன்னந் தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்பதுதான். இந்த சமூகம் தனித்துவ அடையாளம் கொண்டவர்களை எப்போதும் பொதுவான அடையாளத்திற்குள் வரும்படி கூறுகிறது நீ ஏன் அவன் போல இல்லை நீ ஏன் இவன் போல இல்லை என்பதை மீண்டும் மீண்டும் இச்சமூகம் சொல்கிறது.

"“ஆமா!? லோச்சனம் நீ ஏண்டி இப்படி இருக்கே? எல்லாரு மாதிரியும் இருக்கப்படாதோ?...” 

""எல்லாப் பொண்ணும், எல்லா மாடும், எல்லா மிருகங்களும், ஒங்களுக்கு ஒண்ணாயிருக்கணும், ஒழுங்கா தீனி தின்னனும், குட்டி போடணும், வேற மாதிரி இருக்கக்கூடாது, இல்லையா?"

(சிறுகதையில் இருந்து)

உறவினர்களும் ஊர்க்காரர்களும் அவளை ஒதுக்கி வைத்தாலும் அங்கே மீன்பிடிக்கும் மீனவர்களும் ஆடு மேய்ப்பவர்கள் ஆசாரியரும் என்று பலர் லோசனம் இடம் சகஜமாக பழகுகிறார்கள் அவளோடு சேர்ந்து உணவு உண்கிறார்கள். விளிம்பு நிலை மக்கள் எப்போதும் அன்பால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் மேட்டுக்குடி வர்க்கம் தான் பல்வேறு பாசாங்குகளை பூசிக் கொண்டு வாழ்கிறார்கள் இத்தொகுப்பில் இதுவும் ஒரு சிறந்த கதையாக எனக்கு படுகிறது. 

இன்னும் பல சிறந்த கதைகளும் இருப்பதால் வாசிக்கலாம், இதன் தொகுப்பாசிரியர் சமிபத்தில் 12-1-2021 அன்று மறைந்தார்.