இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Thursday, January 21, 2021

சிறுகதை தொகுப்பு



தஞ்சைச் சிறுகதைகள்-சோலை சுந்தரபெருமாள்(தொகுப்பு)
பக்கங்கள் - 499
Kindle book

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களான 32 பேரின் சிறுகதைகளை எழுத்தாளரின் சிறிய அறிமுகத்தோடு தொகுத்திருக்கிறார். அனைத்து கதைகளும் தஞ்சை கிரம வாழ்வை அடிப்படையாக கொண்டவை. 80துக்கு முன்னதான கதைகளம். 

1)பட்டுவின் கல்யாணம்- கா. சி. வேங்கட மணி

சுப்பிரமணிய சாஸ்திரியார் அரசாங்க அதிகாரி பனைமரங்களும் பொறுப்பாளர் சாலவேடு ரேஞ்சுக்கு மாற்றலாகி வருகிறார். அந்தப் பகுதிக்கு வந்து விட்டால்  சிறிய குட்டி குபேரன் ஆகவே ஆகிவிடலாம் என்பது மக்கள் மொழி. மனைவியோ அவருக்கு கொடுத்த பட்டம் பிழைக்கத் தெரியாதவர், மகளுக்குப் பன்னிரண்டு வயதாகிறது இன்னும் திருமணம் செய்துவைக்க எண்ணமில்லை என்று கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறாள் இலட்சக்கணக்கான பனை மரங்களுக்கு இவர்தான் அதிகாரி மரம் ஒன்றுக்கு ஓரணா  இவருடைய வருமானம் அதில் பலருக்கு படியளக்க வேண்டும் கையில் சல்லிக்காசு இல்லாமல் மகளின் திருமணத்தை எப்படி நடத்துவது என்று திட்டம் தீட்டுகிறார், பனை மரங்களுக்கு எண் இடுவதின் மூலம்  குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்றும் அதன் வழியாக மகளின் திருமணத்தை நடத்தி விடலாம் என்று திட்டம் போட்டு வரன் பார்க்கச் செல்கிறார் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை. 1937ல்  எழுதப்பட்ட இக்கதை அக்கால மக்களின் வாழ்க்கை நிலையும், பூப்பெய்தியதும்  பெண்களுக்கு திருமணம் செய்தாக வேண்டும் என்ற கட்டாயமும், அரசாங்க அதிகாரிகளின் பாடுகளும் சிறப்பாக உணர முடிகிறது.

2).வண்ணார வீரம்மாள் - வ.ரா
முற்போக்கு எழுத்தாளராக அறியப்படும் இவர் பூணூல் ஆச்சாரங்கள் கொண்ட ஒருவருக்கும் வண்ணார பெண்ணான ஒருவருக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார் சிறுகதைகளுக்கு உரிய இறுதி திருப்பம் இக்கதையை மேலும் வலுப்படுத்துகிறது.

3). கு. ப.ராஜகோபாலன்- விடியுமா

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய காயத்திற்கு  'காலம்' தான்  சிறந்த மருந்து, வாழ்க்கையில் அதிமுக்கியமான ஒன்றாக நாம் நினைத்துக் கொண்டு கண்ணீர் விட்டதை சிறிது காலம் கழித்து நினைத்துப் பார்க்கும்போது நமக்கே வேடிக்கையாக இருக்கும். இதுவே இக்கதையின் மையம். சிவராமையர் டேஞ்சரஸ் என்ற தந்தி கண்டு அவரது உறவினர்கள் சென்னைக்கு புறப்படுகிறார் சென்னை சென்று அவரைப் பார்த்தார்களா என்பது தான் மீதிக்கதை. ரயிலில் பயணம் செய்யும் போதும் தந்தி கிடைத்த உடனேயும் இவர்கள் படும் துக்கம் தாளாது ஆனால் காலம் என்னும் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று படித்து பாருங்கள்.

4). கோபுர விளக்கு - தி. ஜானகிராமன்

பெண்களை ஒரு சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தை நாம் எளிதாக மதிப்பிட முடியும். இளமையில் கணவனை இழந்த ஒரு பெண்ணின் பொருளாதார தேவைக்கான அனைத்து வழிகளையும் இச்சமூகம் எழுந்து வந்து அடைத்து விடுகிறது, சிலர் தங்கள் பாலியல் சுய தேவைக்காக தங்கள் கதவுகளின் தாழ்வை நீக்கி அவர்களை உள்ளே அழைக்கிறார்கள். ஒரு பெண் பாலியல் தொழில் செய்கிறார் என்பதை ஜனகிரமன் இவ்வாறு எழுதுகிறார்
 "ஈச்வரி! இரண்டு நாளாக வயிறு காயறது. இன்னிக்காவது கண்ணைத் திறந்து பார்க்கணும். தாராள மனசுள்ளவனா... ஒருத்தனைக் கொண்டு விட்டுத் தொலைச்சா என்னவாம்...?"
இதை படித்ததுமே தர்மு பாலியல் தொழில் செய்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது இதை சொல்வதற்கு பல வழிகள் இருந்தாலும் எழுத்தாளர் எவ்வளவு நுட்பமாக இதை உணர்த்துகிறார். இப்படி பாலியல் தொழில் செய்ததால் தர்மு கர்ப்பம் ஆகிவிடுகிறாள், கர்ப்பத்தை கலைக்க அவளின் தாய் முயற்சி செய்யும் போது அவள் இறந்து விடுகிறாள் அவர் இறந்த பிறகு அவனுடைய பிணத்தை தூக்குவதற்கு கூட ஊரிலிருந்து யாருமே சொல்லவில்லை ஊரே அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இருக்கிறது. கதை இப்படி முடிகிறது
"" இருட்டில் தட்டித் தட்டி கிழக்கு வீதி வெளிச்சத்திற்கு வந்தோம்.""
சமூகமே இருட்டில் கிடந்து கொண்டு பிறர் மீது குற்றம் சுமத்தி கொண்டிருப்பதாக குறியீடு மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

5). வாழ முடியாதவர்கள் - மு. கலைஞர்

கலைஞர் தமிழகத்தில் முத்தமிழ் அறிஞர் என்று போற்றப்பட்டாலும்  இலக்கிய உலகம் அவரை தூக்கி வெளியில் எறிந்து இருக்கிறது என்பதுதான் உண்மை. திலோத்தமை திரைப்படம் பார்த்துவிட்டு வந்த திருமணமாகாத மகளும் மறுமணம்  செய்ய முடியாத தந்தையும் அன்று இரவு உடலுறவில் ஈடுபடுகிறார்கள். இதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் புராண இதிகாசம், கடவுள்கள், முற்போக்கு, வறுமை என்று பல பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் எழுத்தாளர். என்ன எழவு ஐய்யா இதெல்லாம்?.

6).பற்றி எரிந்து விழுந்த தென்னை மரம் - தஞ்சை பிரகாஷ்

லோச்சனா விற்கு குஷ்ட நோய் வந்தபிறகு அவளுடைய உறவினர்கள் அவளை ஒதுக்கி வைக்கிறார்கள். அவள் காவிரி ஆற்றைத் தாண்டி ஓரிடத்தில் தன்னந்தனியாக தானே செங்கல் அறுத்து தனக்கு பிடித்தது போல ஒரு வீட்டைக் கட்டிக் கொள்கிறாள், வீட்டை சுற்றி திருக்கள்ளி சப்பாத்திக்கள்ளி ஒற்றைக்களி என்று  செடிகளாக வைத்து வளர்க்கிறாள். குஷ்ட ரோகத்தை மறைப்பதற்காக பெயிண்ட்டை வாங்கி தன் உடல் முழுவதும் இலைகளும் கொடிகளும் வரைந்து கொள்கிறாள். ஆனால் இந்த சமூகம் அவள் முன் எழுப்பும் கேள்வி நீ நோய் வந்தபின் மருத்துவமனையில் ஒரு அறையில் சுருண்டு கிடக்காமல் இப்படி தன்னந் தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்பதுதான். இந்த சமூகம் தனித்துவ அடையாளம் கொண்டவர்களை எப்போதும் பொதுவான அடையாளத்திற்குள் வரும்படி கூறுகிறது நீ ஏன் அவன் போல இல்லை நீ ஏன் இவன் போல இல்லை என்பதை மீண்டும் மீண்டும் இச்சமூகம் சொல்கிறது.

"“ஆமா!? லோச்சனம் நீ ஏண்டி இப்படி இருக்கே? எல்லாரு மாதிரியும் இருக்கப்படாதோ?...” 

""எல்லாப் பொண்ணும், எல்லா மாடும், எல்லா மிருகங்களும், ஒங்களுக்கு ஒண்ணாயிருக்கணும், ஒழுங்கா தீனி தின்னனும், குட்டி போடணும், வேற மாதிரி இருக்கக்கூடாது, இல்லையா?"

(சிறுகதையில் இருந்து)

உறவினர்களும் ஊர்க்காரர்களும் அவளை ஒதுக்கி வைத்தாலும் அங்கே மீன்பிடிக்கும் மீனவர்களும் ஆடு மேய்ப்பவர்கள் ஆசாரியரும் என்று பலர் லோசனம் இடம் சகஜமாக பழகுகிறார்கள் அவளோடு சேர்ந்து உணவு உண்கிறார்கள். விளிம்பு நிலை மக்கள் எப்போதும் அன்பால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் மேட்டுக்குடி வர்க்கம் தான் பல்வேறு பாசாங்குகளை பூசிக் கொண்டு வாழ்கிறார்கள் இத்தொகுப்பில் இதுவும் ஒரு சிறந்த கதையாக எனக்கு படுகிறது. 

இன்னும் பல சிறந்த கதைகளும் இருப்பதால் வாசிக்கலாம், இதன் தொகுப்பாசிரியர் சமிபத்தில் 12-1-2021 அன்று மறைந்தார்.