இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Saturday, January 19, 2019

வெக்கை - பூமணி



ஒரு ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பூமணி அவர்கள் படைப்பை வாசிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய  'வெக்கை' நாவலை வாசிக்க எடுத்தேன். நான் இலக்கியத்திற்கு மிகமிக புதியவன் என்பதால் அந்த நாவலில் வட்டார வழக்கு சுத்தமாக என்னால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பிறகு ஓராண்டு கழித்து இப்போது அந்த நாவலை வாசித்து முடித்தேன்.

" சிரம்பரம் நினைத்தது அப்படியில்லை, அவன் வலது கையை மட்டுமே துண்டிக்க நினைத்திருந்தான்"

என்று தொடங்கும் நாவல், அடுத்து என்ன என்று வாசகனை மேலும் வாசிக்க தூண்டுவதற்கான சிறு உத்தி இது. ஆனால் இந்த நாவலில் நாவல் முடியும் வரையிலும் வாசகனுக்கான இடம் வாசகனின் பங்களிப்பை கோரும் இடங்கள் அதிகம், சொல்ல பட்டதை வைத்து ஒரு வாசகன் சென்றடைய வேண்டிய இடங்கள் நிறைய விடப்பட்டு இருக்கிறது அது ஒரு மெல்லிய ரகசியம்போல் நாவல் முழுக்க பயணிக்கிறது. வடக்கூரான் செலம்பரம் அய்யா வைத்திருக்கும் சிறு நிலத்தை அபகரிக்க நினைக்கிறான் அது முடியாமல் போகவே செதம்பரனின் அண்ணனை கொலை செய்கிறான், அந்த கொலைக்கு பழிவாங்கி விட்டு செதம்பரமும் அவன் அய்யாவும் தலைமறைவு வாழ்கை வாழ்கிறார்கள். இந்த நாவலை வகைப்படுத்த வேண்டும் என்றால் 'தலித்திய நாவல்' என்று சொல்லலாம் அவனால் பூமணி ஒரு நேர்காணலில் "இலக்கியத்தில என்ன தலித் இலக்கியம், கொங்கு இலக்கியம், கரிசல் இலக்கியம் எல்லாம் 'இலக்கியம்' அவ்ளோ தான்" என்று குறிப்பிட்டுள்ளார் அதனால் தலித்ய பார்வையை தவிர்த்து பார்த்தால். எதார்த்த இலக்கியத்தில் எழுத்தாளரின் மிகை புனைவு இல்லாமல் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது, எளிய மக்கள் வலிமை வாய்ந்த மனிதனையோ அரசையோ, சட்டத்தையோ எவ்வாறு எதிர்க்க முடியும் என்று புரட்சிகர கூச்சல் இல்லாமல் எதார்த்தமாக பதிவு செய்ய இருக்கிறார். மொத்தம் மூன்று கொலை நடக்கிறது, செதம்பரம் செய்த கொலைக்கு மட்டும் அவர்கள் துரத்தபடுகிறார்கள் மற்ற இரண்டு கொலையும் கண்டுகொள்ளபடவில்லை. இதன் காரணமாக சட்டத்தின் மீது சாமானியர்களுக்கு ஏற்படும் அதிர்ப்தியை நாவல் முழுவதும் விவாதிக்க படுகிறது.

'உள்ள வெச்ச கைவக்ரதுலாம் பெறுமையா'

'உனக்கு இல்ல அவனுக்கு இருக்கே '

'இந்த போலிசு எதுக்கு நம்ம குண்டிக பிண்ணாடியே திரிரான்'

'இந்த சட்டம் கிட்டம் எல்லாம் இருக்க கொடாது அனைக்குத தெக்க அப்பவே சூட்டோட சூட ஒடனே தண்டனை சொல்லுடனும்'

'துட்டுகையேரிச்சுன விட்ல தொல்ல படுத்துவாங்களே '

' சாராயக்காரர்கள் போலீசை கண்டால் தலைமறைவாகி விடுவார்கள், பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள் என்பதற்காக அல்ல ஓசியில் சாராயம் ஊற்றி முடியாதே, அது மட்டுமில்லாமல் மாமூல் வேறு கொடுக்க வேண்டும், கறி தின்ன காசு கொடுக்க வேண்டும், மாதம் ஒரு கேஸ் கொடுக்க வேண்டும்'.

இங்கு சட்டங்கள் என்பது எளியவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையாகவே இருக்கிறது. சட்டம் சமமற்றதாக இருக்கும் போது இந்த நாட்டின் மீது இருக்கும் பற்றிலிருந்து எளிய மக்கள் விலகிச் செல்கிறார்கள். ஆனால் எந்த நிலையிலும் அறத்தையும் மானுட நியாயங்களையும் கைவிடாத மனிதர்கள் அவர்கள். களவுக்கு செல்பவர்கள் கூட ஏழைகள் கஷ்டப்படும் சம்சாரிகளின் நிலத்தில் களவு செய்வதில்லை சிதம்பரத்தின் அண்ணன் ஆடு மேய்க்கும் போது எந்த சம்சாரிகளின் வயலிலும் ஒரு சிறு பயிரை கூட மேய விடுவதில்லை. சிதம்பரமும் அவன் அய்யாவும் தலைமறைவாக இருக்கும் காலத்தில் உணவு சமைக்க ஒரு பனை மரத்தில் பதனிக்காக கட்டப்பட்டிருக்கும் பானையை எடுத்து வந்து சமைக்கிறார்கள், மீண்டும் அதே மரத்தில் பானையை கொண்டு கட்டிவிட்டு தான் அந்த இடத்தில் இருந்து புறப்படுகிறார்கள். அவர்கள் அலைந்து திரியும் போது மிகுந்த தாகத்தில் ஒரு தக்காளித் தோட்டத்தைப் கடக்கிறார்கள் அப்போது சிதம்பரத்தின் ஐயா சொல்கிறார்..

' இரண்டு பழத்த பிடுங்கி வாயில்  நமட்டிகிரயா, தண்ணீ தாகம் அடங்குமே'

' பாவம் அவன் என்ன பாடுபட்டு தண்ணீர் எறச்சானோ, அவ வயித்துல அடிக்கவா, கிணத்துல தண்ணி இருந்தால் குடிப்போம் இல்லைன்னா அடுத்த இடம் போவோம்'

வாழ்க்கையில் எதுவும் இல்லாவிட்டாலும் அந்த கரிசல் காட்டு மக்கள் வாழ்வை பேர்ருவகையுடனே வாழ்கிறார்கள், அதை நோக்கி அவர்களை செலுத்துவது அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு தான். செலம்பரம், அய்யா, ஆத்தா, மாமா, சித்தி என்று அவர்கள் வைத்திருக்கும் அன்பும் பினைப்பும் வியக்க வைக்கிறது " அன்புடையார் எம்பும் உரியர் பிறர்க்கு என்றால்" அது இந்த கரிசல் மக்கள் தான். நாய விட்டு வந்துடோம் பவம் கஞ்சி குடிக்காம எலச்சி போயிருக்கும் என்று அவர்கள் நாயையும் சேர்த்தே தன் குடும்பமா நினைக்கிறார்கள். வதமிழில் முக்கியமான நாவல்களில் இது ஒன்று என எஸ் ராமகிருஷ்ணன் ஜெயமோகன்( கலை படைப்பு முழுமையாக கைகூடாத) குறிப்பிட்டுள்ளார்கள். வெக்கையாக தான் இருக்கிறது இன்னும் அவர்களின் நிலமும் மனமும்......