இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, August 27, 2018

நெடுங்குருதி-எஸ் ராமகிருஷ்ணன்

நெடுங்குருதி-எஸ் ராமகிருஷ்ணன்




வாழ்வின் நேரடி எதார்த்தத்தையும் நுட்பமான காட்சிப் படிமங்களின் சித்தரையும் கொண்டு உயிர்ப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்ட ஒரு அற்புத படைப்பு தான் நெடுங்குருதி. நாவலின் கதை வேம்பலை என்ற கிராமத்தில் மக்களையும் அவர்களின் வாழ்வையும் புனைவு எதார்த்தமாக சித்தரித்துக் காட்டும் ஒரு படைப்பு நாவலின் முதல் பகுதி 'கோடைக்காலம் ' 'காற்றடிகாலம்' இந்த இரண்டு பகுதியுமே நாகு என்ற மைய கதாபாத்திரத்தின் வாழ்வியலோடு நாகுவின் பதின்பருவத்து அக உள சித்தரிப்பக மேலே விரிகிறது. ஊரை விட்டு வெளியே இருக்கும் புறவழிச்சாலை வழியாக எறும்புகள் சாரையாக செல்வதை பார்த்து கொண்டு இருந்தான் நாகு என்று தொடங்குகிறது நாவல். ஒரு எறும்பு ஊரை விட்டு வெளியேறி செல்கிறது என்றால் பெரும் பஞ்சம் வருவதற்கான குறியீட்டாக எறும்புகள் இருக்கிறது. வேம்பர்கள் களவை தொழிலாகக் கொண்டவர்கள் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் வேம்பர்களை அடக்குவதற்காக வெல்சி என்ற வெள்ளைய அதிகாரி வேம்பர்களை அந்த ஊரில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தில் தூக்கிலிடுகிறான். அந்த வேம்பு பிறகு பூக்கவோ காய்கவோ இல்லை, இதற்காக பதவி உயர்வு கிடைத்து வேறு இடத்திற்கு சென்ற பிறகு மர்மமான முறையில் இறந்து போகிறான், இந்த நிகழ்வு நாவலோடு ஒட்டாமல் மெல்லிய விலகலை கொடுப்பதாக தோன்றுகிறது. வரலாற்றுச் செய்தியாக அது தனியாக நின்று விடுகிறது. வேம்பலை என்ற கிராமத்தை நினைக்கும்போது மனதில் ஒட்டுமொத்த சித்திரமாக தோன்றுவது பக்ரீயின் மனைவி வீடு ஆதிலட்சுமி வீடு சில வேப்ப மரங்கள் இவை மட்டுமே தோன்றுகிறது நாவலில் புறவயமான காட்சி விரிப்புக்கள் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் அந்த கிராமத்தில் இருந்த மற்ற குடும்பங்கள் பற்றியோ அவர்களின் தொழில் வாழ்க்கை முறை பற்றி அதிகமாக வருவதில்லை, கிராமத்திற்கும் வெளி உலகிற்கும் உள்ள உறவும் எதுவும் இல்லை, நாகுவின் ஐய்யா கொண்டு வரும் பெட்ரமாஸ் லைட் மற்றும் செருப்பு தவிர. பெட்ரமாஸ் லைட் புழக்கத்திற்கு வந்தது 1910ஆம் ஆண்டுக்குப் பிறகு கைரேகை தடைச்சட்டம் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது 1924ம் ஆண்டு நாகு இறக்கும் போது வயது 35 என வைத்துக் கொண்டால் நாவல் தொடங்கப்பட்டு 1905 ஆம் ஆண்டு முதல் நாவலின் இறுதி 1950ஆம் ஆண்டு எனக் கொள்ளலாம். ஏனென்றால் நாவல் தொடங்கும் போது நாகுவின் வயது பதினொன்று என்று தொடங்குகிறது. முதல் பகுதியில் வரும் நாகு பதின்வயதின் சித்தரிப்பாக வருகிறான் இரண்டாம் பகுதியில் வரும் நாகு முற்றிலும் வேறுவகையான நாகு. இரண்டாம் பகுதியில் வரும் நாகு அலைந்து திரிபவன் ஆகவும், காமத்தின் அலைகழிப்பாகவும் சுற்றி அலைகிறான். பெரிய களவு எதிலும் ஈடுபடாத நாகு துப்புக்கூலி மட்டும் ஒரு முறை பெற்ற நாகு கைரேகை தடைச்சட்டத்தின் போது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படுகிறான் இது நம்மை திடுக்கிட்ட செய்கிறது. மொத்த வேம்பலையும் கூட பெரிய களவில் ஈடுபடவில்லை என்று தோன்றுகின்து. நாகுவின் மரணத்திற்கு பிறகு கிராம மக்கள் சாய செய்தார்களா என்று தெரியவில்லை. இப்படி நாவல் முழுவதும் பல மரணங்கள் வந்து கொண்டே இருக்கிறது மரணங்கள் ஊடே காலம் நீண்டு நெளிந்து சென்று கொண்டு இருக்கிறது. நாகுவின் ஐய்யா நாவலில் முக்கிய கதாபாத்திரம் பெரிதாக எந்த சண்டையும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போய்விடுகிறார் பல ஆண்டுகள் கழித்து வருகிறார். திரும்பவும் பரதேசியாக போகிறார் ஒரு கோவிலில் நாகு அவரை கண்டுபிடித்து வேம்பலைக்கு கூட்டிவருகிறான். இயலாமையும், இருப்புகொள்ளாமையும், வறுமையும் அவரை அலைக்கழிக்கிறது. பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் ஊகங்கள் வழியாக அவர் வளர்ந்து இருப்பது நம்மையும் அறியாமல் அவர் இறப்பின் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பக்கீரின் கொலையில் அவருக்கு இருக்கும் தொடர்பு பற்றி பேசப்படவில்லை என்பது.

மரணத்தோடு தன் காய்களை நகர்த்தி விளையாடிக்கொண்டிருக்கும் சிங்கி மூலமாகத்தான் ஒரு இடத்தில் களவு வருகிறது. குழந்தைகளின் கழுத்தில் இருக்கும் நகைகளை சிங்கி களவாடுவது இல்லை என்று சொல்லப்படுகிறது இதைத்தவிர களவை மையமாகக் கொண்ட ஒரு நாவலில் களவு பற்றி எங்கும் பெரிதாக பேசப்படவில்லை. அதேபோல் நாவலில் வட்டார வழக்கு மொழிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை அனைத்தும் எழுத்தாளரின் சிறந்த தனித்தன்மையுடைய மொழியின் வாயிலாகவே வெளிப்படுகிறது எந்த கதாபாத்திரமும் அதிகமாக உரையாடுவதே இல்லை. இது நாவளின் தனி சிறப்பாகவே எனக்கு தோன்றுகிறது. ரத்தினா மல்லிகாவை பார்க்க வரும் இடத்தில் எந்த ஒரு உரையாடலோ ஆசிரியரின் வழியாகவோ கூட பேசப்படவில்லை வேம்பின் பெரும் கசப்பு மௌனத்தின் ஊடாக உறைந்து நிற்கிறது. நாவலின் நெகிழ்வான இடம் நீலாவின் சமாதியில் இருக்கு மண் புழுவை கொண்டு வந்து "வீட்டடியிலே இருந்துகோ தாயி..." என்று நாகுவின் ஐய்யா சொல்லும் இடம் இலக்கியத்தின் உச்ச தருணம். கோடைக்காலம், காற்றடிகாலம், மழைக்காலம், பனிக் காலம் என்று நாவல் நான்கு பகுதிகளாக எழுதி இருந்தாலும் அனைத்திலும் உறைவது பெரும் வெய்யில் தான், நாவல் முழுக்க வெயில் வருகிறது, அதே போல் வேம்பின் தீரா கசப்பு, கசப்பு நிறைந்த அந்த மக்களின் வாழ்வை அசைபோட்ட படி குறியீட்டு சித்திரமாக மனதில் பதிகிறது.

நாவலின் இரண்டாம் பகுதி நேரடியாக நவீன வாழ்க்கையை சித்தரிக்கிறது பேருந்து, ஹோட்டல், லாட்ஜ், சாலை, கார் என்று நவீன உலக தொடர்போடு விரிகிறது. வேம்பலையின் இரண்டாம் தலைமுறை திருமால், வசந்தா. காதல் கம்யூனிஸம் பற்றி பேசப்படுகிறது ஆனால் அவர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை வேம்பர்களின் அதே கசப்பு மிகுந்த வாழ்வே எஞ்சுகிறது. லாட்ஜ் லாட்ஜக தனிமையில் சுற்றி திரியும் ரத்தனா தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் தருணம் மீண்டும் அதே கசப்பேறிய வாழ்வின் வெறுப்பு வெளிப்படுகிறது. ஆனால் அவள் விரும்பிப் பெற்றுக் கொண்ட திருமாலின் மீது ஏன் வெறுப்பாகவே இருந்தாள் என்பது புரியவில்லை. ரத்தினா தத்தனேரி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறாள் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர் மதுரையைச் சேர்ந்த ஜி நாகராஜன் தத்தனேரி சுடுகாட்டில் தான் தகனம் செய்யப்பட்டார், ஆக கதை களம் மதுரையை ஒட்டிய பகுதி என்பது உறுதியாகிறது.

வெறுமை நிறைந்த வாழ்வு, வறுமையும், துக்கமும் அன்பும், மரணமும் நிறைந்து நிற்கும் வேம்பலை அதன் முதாதையர்களின் மூச்சு காற்றும் மனிதர்களை வசியப்படுத்தி தன்னுள் இழுத்து கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியே மீண்டும் ஒரு நாகு வேம்பலை நேக்கி போகிறான் அங்கிருந்து அடுத்த தலைமுறையின் கதை தொடங்குகிறது. அரையப்பட்ட ஆணிகளும், காயங்களும் தன்னுள் புதைத்து கொண்டு மீண்டும் பூத்து காய்க்கும் அந்த வேம்பை போல அவர்கள் வாழ்வும் கசபின்றி செழிக்கலாம். "நெடுங்குருதி" வாழ்வின் எதார்த்த கலை இலக்கியத்தின் உச்சம். 

Sunday, August 12, 2018

மூங்கில் கோட்டை - சாண்டில்யன்



நீண்ட நாட்களாக எந்த புத்தகத்தையும் முழுமையாக வாசித்து முடிக்காததால் இந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  பொதுவாக வரலாற்று நாவல்கள் ஒன்று இரண்டு குறிப்புகளை வைத்துக் கொண்டு மொத்த நாவலையும் கற்பனையாக புனையும் வகையை கொண்டது ஒரு தீவிர இலக்கிய வாசகனுக்கு அதனால் வரலாற்று நாவல்கள் சற்று சலிப்பூட்டுவதாகவே அமையும். இளம் வயதில் அரியணை ஏறிய பாண்டிய நெடுஞ்செழியனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த நாவல், சேரர் சோழர் படைகளை வெற்றிக் கொண்டு சேரமானை சிறை எடுத்து ஒரு மூங்கில் கோட்டை அமைத்து அதைச் சுற்றி அகழிகள் அமைத்து மறைத்து வைக்கப்பட்டார். சேரனை விடுவிக்க வந்த அவனது யானைப் படைகள் அருவியில் விழுந்து பாண்டியனின் உத்தியால் தோல்வியுற்றதாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றை வைத்துக்கொண்டு மொத்த நாவலும் புனையப்பட்டிருக்கிறது இதில் வரும் கதாநாயகன் இளமாறனுக்கு எடுத்துச் சொல்லி விளக்கம் கொடுப்பதாக நாவல் முழுக்க அமைந்துள்ளது பொதுவாக சாண்டில்யன் நாவல்களில் கதாநாயகியை வர்ணிக்கவே ஐம்பது பக்கங்கள் எடுத்துக்கொள்வார் இது எனக்கு மிக மிக சலிப்பூட்டுவதாக இருப்பதால் நாம் சாண்டில்யன் புத்தகங்களை தொடுவதே இல்லை ஆனால் விரைந்து வாசிக்க வேண்டும் என்பவர்கள் சாண்டில்யன் போன்ற வரலாற்று நாவல்கள் தான் மிகச்சிறந்த தேர்வு . தமிழகத்தில் இது போன்ற நாவல்கள்தான் அதிகமாக வாசிக்கப் படுகிறது அதனால் இந்த நாவல் இருபத்தி ஐந்து பதிப்புகளை தொட்டிருக்கிறது. 

Monday, July 30, 2018

இடக்கை - விமர்சனம்

நாவல் - இடக்கை
எழுத்தாளர் - எஸ் ராமகிருஷ்ணன்
பதிப்பகம் - உயிர்மை
விலை -375ரூ




ஔரங்கசிப் மரணப்படுக்கையில் இருந்து தொடங்கும் நாவல், பல்வேறு கிளை விரித்து வளர்கிறது. சிறு சிறு அத்யாயங்களாக இருப்பதால்  தடையில்லாமல் வாசிக்க உதவியாக இருக்கிறது. பொதுவாக நம் சமுகம் நீதி உணர்வற்ற சமுகமாக நாம் மாறி வருகிறோம், ஜெயமோகன் நாவலில் ஒரு வரி வரும் 'நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு தெரிந்த நீதி உணர்ச்சி மீது ஒரு கை மண்ணை அள்ளி போடவேண்டியது தான்' என்று அதே தான் நாம் அனைவரும் செய்து கொண்டு இருக்கிறோம். நீதி நேர்மைகளை கேலியாக்கி சிரிக்கிறோம். நம் நீதி உணர்ச்சி மீது ஒரு கை மண்ணை அள்ளி நாமே போட்டு கொள்கிறோம். ஆனால் இந்த தேசத்தில் தான் பல நீதி நூல்கள் நீதி கதைகள் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நாவலும் நீதிக்காக காத்திருப்பவர்களின் குமுறலாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களின் துயரமாகவும் தான் பேசுகிறது. ஒரு பேரரசின் வீழ்ச்சி எப்படி எளிய மனிதர்களையும் பாதிக்கிறது என்றும் அரசு நீதியுணச்சி இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்று இடக்கை சொல்கிறது. விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்வு அன்றும் இன்றும் ஒன்றுபோலவே தான் இருக்கிறது என்பதையும் பேசும் இடக்கை.  சத்கர் ஔரங்கசிப் ஆட்சியின் கீழ் கப்பம் கட்டும் சிற்றரசு அதன் அரசன் பிஷாடன். ஒரு நாளைக்கு இரண்டு வழக்குகள் மட்டுமே விசாரிக்கும் பிஷாட மன்னன் ஒருவனுக்கு தூக்கு மற்றொன்று னுக்கு விடுதலை என்று கண்மூடிதணமாக திர்ப்பு சொல்வதானால் பல வழக்குகள் தேக்கி கிடக்கிறது, பலர் தங்களது நீதிக்காக காத்து இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் காலா என்ற இடத்தில் அடைக்கபடுகிறார்கள்,அப்படி கைது செய்து கொண்டுவரபட்டவன் தான் தூமகேது, ஆட்டு தோல் பதப்படுத்துதல் அவன் தொழில் அதனால் அவன் ஆடு திருடினான் என்று பொய் குற்றச்சாட்டு மீது கைது செய்ய படுகிறான். தூமகேது வழியாக தான் நாவல் பயணிக்கிறது. ஒருமுறை தூமகேது பொது கிணற்றில் குளித்து விடுகிறான், தாழ்த்தப்பட்ட சாதியினார் எப்படி இதை செய்யலாம் என்று அவனுக்குத் தண்டனையாக நாய் மலத்தை வாயில் ஊற்றுவார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் சிறுநீர் கழிப்பது என்பது இன்று வட இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் தான் மனிதன் கலாச்சாரம் மட்டுமன்றி இது போன்ற இழிவுகளையும் தொடர்ந்து பின்பற்றிவருவது மிக மோசமான ஒன்று. நமது உட‌லி‌ல் வலது கை தான் திருட்டு கொலை என்று அனைத்து குற்றங்களையும் செய்கிறது ஆனால் நாம் தண்டிப்பதோ இடது கை தான், பல்வேறு நல்ல விஷயங்களை தொடங்கும் போது இடது கையை பயன்படுத்த கூடாது என்று தண்டிக்கிறோம். அரசியலிலும் இதுவே தான் நடக்கிறது குற்றமிழைப்பவர்கள் எல்லாம் அரசு அரசியல்வாதிகள் அரசு சார்ந்த அதிகாரத்தில் இருப்பவர்கள், ஆனால் தண்டிக்கப்படுவது எல்லாம் சாதாரண மக்கள் ஏழை எளிய மக்கள். உண்மையில் அறிவியல் மட்டுமே வளர்ந்து இருக்கிறதே ஒழிய மனிதனும் அரசியலும் இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் மாறாது என்றே தோன்றுகிறது. இந்த நாவலின் இன்னோறு கதாபாத்திரம் அஜ்யா மேகம் நம்மை நிலைகுலைய செய்கிறது, பேரரசர்களின் அந்தரங்க பணி பெண் என்றால் மரணத்தின் கத்தி முனையில் நடப்பதற்கு சமமானது, அந்த வித்தையில் ஔரங்கசிப் இடம் அஜ்யா வெற்றி பெற்று இருந்தாலும் ஔரங்கசிப் நினைத்தது போலவே அவர் மரணத்திற்கு பிறகு அஜ்யா மிக மோசமான சித்ரவதைக்கு ஆளாகி இறந்து போவது ஆழமான பாதிப்பை நமக்கு ஏற்படுத்துகிறது. வெறும் கதை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு இந்த நாவல் விடை தருகிறது தூமகேது சொல்லும் கதைகளாள் தான் அவன் சிறையில் இருந்து தப்பிகிரான் என்பது எனக்கும் முதல் அனுபவம். நாவல் தொடக்கத்தில் ஔரங்கசிப் ஒரு ரூபியிடம் ஞானம் கேட்க போவார் அந்த ரூபி அவருக்கு ஒரு கை தண்ணீரை காணிக்கையாக கொடுக்க சொல்வார் ஒரு நாட்டின் பேரரசர் ஒரு கை தண்ணீரை கூட கொடுக்க முடியாத நிலை வரும் அதான் வாழ்க்கையின் நிர்வாண உண்மை. இந்த நாவலை முடியும் போது அதே உணர்வு தான் தோன்றுகிறது பேரரசர் கைகளில் இருந்த ஒரு பொருள் சாதாரண பிச்சைக்காரன் கைக்கு வந்து சேரும், இப்படி தத்துவர்தமாக பக்கங்கள் பல. வரலாறு என்பது அரசர்களின் அரண்மனை வாழ்வும் வரலாறாகவும் தான் பதியப்பட்டு இருக்கிறது, எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எளிய மனிதர்களின் வரலாறாக இதை எழுதி இருக்கிறார். ஒரு பேரரசின் வீழ்ச்சி எப்படி சாதாரண விளிம்புநிலை மக்களின் வாழ்வை புரட்டி போடுகிறது என்று பதிவு செய்து இருக்கிறார். வரலாற்றில் பல கிறுக்கு அரசர் ஆட்சி செய்து இருக்கிறார்கள் அவர்களால் மக்கள் அடைந்த துயரங்களையும் இந்த நாவல் பேசுகிறது, இதில் வரும் பிஷாடன் என்ற அரசர் எந்த அளவுக்கு கிறுக்கு என்றால் 'எதிரி நாட்டு மன்னன் நம் மக்கள் மீது படையெடுத்து அவர்களை துன்புறுத்துவதற்கு பதிலாக நாமே நம் மக்களை துன்புறுத்தினால் என்ன?' என்று ஒரு முறை அவன் மாமா இடம் சொல்லுவான். நமக்கு விருப்பமானவர்கள் மரணத்தை அறுகில் இருந்து பார்ப்பது சுகமானது என்றும் சொல்பவன், இப்படி பட்ட மன்னன் ஆட்சியில் மக்கள் வாழ்கை நிலை எப்படி இருக்கும் என்பதை பேசுகிறது நாவல். ஒரு புத்தகம் தான் இன்னோறு புத்தகத்திற்கு வழி காட்டும் அல்லாது நான் ஏற்கெனவே படித்த சிறந்த ஒன்றை நினைவுபடுத்தும், கடைசி அத்தியாயத்திற்கு முன் அத்தியாயம் தஞ்சை பிரகாஷ் அவர்களின் 'புறா சோக்கு' நினைவு படுத்தியது. தூமகேது ஒரு முறை தன்னை ஒரு தூக்கு கயிறு விற்பவர் என்று ஜலீல் என்ற கவிஞர் இடம் கூறுவான், அரசின் கெடுபிடிகளை, அநீதியை எதிர்த்து அரசை தண்டிக்க முடியாதவர்கள் தங்களை தாங்களே தண்டித்து கொள்ள தூக்கு கயிறு விற்பதாக சொல்லுவான், என்னை தூமகேது போன்றவர்களின் குரலாக என் கவிதைகள் இனி பேசும் என்பான் ஜலீல்.  கண்ணீர், துக்கம், ஏமாற்றம் பசி என்று அனைத்தையும் சுமந்தவாரு யாத்ரீகர்கள் பாடலை கேட்டு கொண்டு தனது இடக்கையை மெல்ல அசைத்து தாளமிடுவன் தூமகேது. ஒரு நாவல் உங்கள் மனதின் மேடு பள்ளங்களில் பல நாள்கள் அலையடித்து தொடரும் என்றால் அதுவே சிறந்த புத்தகம்.



Monday, January 1, 2018

கடந்த ஆண்டு 2017 நான் வாசித்த புத்தகங்கள்.



கடந்த ஆண்டு 2017 நான் வாசித்த புத்தகங்கள்.


1).செம்மீன்- தகழி சிவசங்கரன் பிள்ளை. (மொழிபெயர்ப்பு சுந்தர ராமசாமி) *
2).வாடிவாசல்- சி.சு செல்லப்பா. *
3).அசுரகனம்-கா.ந சுப்ரமணியம்.
4).தேர்ந்தெடுத்த கதைகள்-கி.ராஜநாராயணன். *
5).ஒரு காதல் திவந்தம்-பாலகுமாரன்.
6).ஏழாம் உலகம் - ஜெயமோகன்.
7).சிவப்புச் சின்னங்கள்-எம். சுகுமாரன். ( மொழிபெயர்ப்பு நிர்மால்யா) *
8).ஒற்றன்- அசோகமித்திரன்.
9).தலைச்சுமை-பழமன்.
10).ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்க்கின்ஸ். *
11).குறு நாவல்கள் - ஜெயமோகன்.
12).மலைவாசல் - சாண்டில்யன்.
13).எக்ஸைல் - சாரு நிவேதிதா*
14).ஜே ஜே வின் சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி. (130 பக்கங்கள் படித்து தலைவலி வந்து திருத்தப்பட்டது).
15).வில்லோடு வா நிலவே - வைரமுத்து.
16).ஒரு நாள் - கா.ந சுப்ரமணியம்.
17). பசித்த மானிடம் - கரிசான் குஞ்சு*
18).வெண்முரசு - முதற்கனல் - ஜெயமோகன்
19).வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன்.
20).வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா.
21) ஜீரோ டிகிரி- சாரு நிவேதிதா. *
22). குட்டி இளவரசன்-அந்த்வான் து செந்த்-எக்சுபெரி.
23).திசை அறியும் பறவைகள் - சாரு நிவேதிதா *
24). கடவுளும் சைத்தானும் - சாரு நிவேதிதா.
25).ஏலேய் - பூமணி
26).வெண்முரசு - வண்ணக்கடல் - ஜெயமோகன்.
27).பழுப்பு நிறபக்கங்கள் -சாரு நிவேதிதா.(பகுதி-1).

* குறிபிட்டவை கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.