இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, August 27, 2018

நெடுங்குருதி-எஸ் ராமகிருஷ்ணன்

நெடுங்குருதி-எஸ் ராமகிருஷ்ணன்




வாழ்வின் நேரடி எதார்த்தத்தையும் நுட்பமான காட்சிப் படிமங்களின் சித்தரையும் கொண்டு உயிர்ப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்ட ஒரு அற்புத படைப்பு தான் நெடுங்குருதி. நாவலின் கதை வேம்பலை என்ற கிராமத்தில் மக்களையும் அவர்களின் வாழ்வையும் புனைவு எதார்த்தமாக சித்தரித்துக் காட்டும் ஒரு படைப்பு நாவலின் முதல் பகுதி 'கோடைக்காலம் ' 'காற்றடிகாலம்' இந்த இரண்டு பகுதியுமே நாகு என்ற மைய கதாபாத்திரத்தின் வாழ்வியலோடு நாகுவின் பதின்பருவத்து அக உள சித்தரிப்பக மேலே விரிகிறது. ஊரை விட்டு வெளியே இருக்கும் புறவழிச்சாலை வழியாக எறும்புகள் சாரையாக செல்வதை பார்த்து கொண்டு இருந்தான் நாகு என்று தொடங்குகிறது நாவல். ஒரு எறும்பு ஊரை விட்டு வெளியேறி செல்கிறது என்றால் பெரும் பஞ்சம் வருவதற்கான குறியீட்டாக எறும்புகள் இருக்கிறது. வேம்பர்கள் களவை தொழிலாகக் கொண்டவர்கள் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் வேம்பர்களை அடக்குவதற்காக வெல்சி என்ற வெள்ளைய அதிகாரி வேம்பர்களை அந்த ஊரில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தில் தூக்கிலிடுகிறான். அந்த வேம்பு பிறகு பூக்கவோ காய்கவோ இல்லை, இதற்காக பதவி உயர்வு கிடைத்து வேறு இடத்திற்கு சென்ற பிறகு மர்மமான முறையில் இறந்து போகிறான், இந்த நிகழ்வு நாவலோடு ஒட்டாமல் மெல்லிய விலகலை கொடுப்பதாக தோன்றுகிறது. வரலாற்றுச் செய்தியாக அது தனியாக நின்று விடுகிறது. வேம்பலை என்ற கிராமத்தை நினைக்கும்போது மனதில் ஒட்டுமொத்த சித்திரமாக தோன்றுவது பக்ரீயின் மனைவி வீடு ஆதிலட்சுமி வீடு சில வேப்ப மரங்கள் இவை மட்டுமே தோன்றுகிறது நாவலில் புறவயமான காட்சி விரிப்புக்கள் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் அந்த கிராமத்தில் இருந்த மற்ற குடும்பங்கள் பற்றியோ அவர்களின் தொழில் வாழ்க்கை முறை பற்றி அதிகமாக வருவதில்லை, கிராமத்திற்கும் வெளி உலகிற்கும் உள்ள உறவும் எதுவும் இல்லை, நாகுவின் ஐய்யா கொண்டு வரும் பெட்ரமாஸ் லைட் மற்றும் செருப்பு தவிர. பெட்ரமாஸ் லைட் புழக்கத்திற்கு வந்தது 1910ஆம் ஆண்டுக்குப் பிறகு கைரேகை தடைச்சட்டம் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது 1924ம் ஆண்டு நாகு இறக்கும் போது வயது 35 என வைத்துக் கொண்டால் நாவல் தொடங்கப்பட்டு 1905 ஆம் ஆண்டு முதல் நாவலின் இறுதி 1950ஆம் ஆண்டு எனக் கொள்ளலாம். ஏனென்றால் நாவல் தொடங்கும் போது நாகுவின் வயது பதினொன்று என்று தொடங்குகிறது. முதல் பகுதியில் வரும் நாகு பதின்வயதின் சித்தரிப்பாக வருகிறான் இரண்டாம் பகுதியில் வரும் நாகு முற்றிலும் வேறுவகையான நாகு. இரண்டாம் பகுதியில் வரும் நாகு அலைந்து திரிபவன் ஆகவும், காமத்தின் அலைகழிப்பாகவும் சுற்றி அலைகிறான். பெரிய களவு எதிலும் ஈடுபடாத நாகு துப்புக்கூலி மட்டும் ஒரு முறை பெற்ற நாகு கைரேகை தடைச்சட்டத்தின் போது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படுகிறான் இது நம்மை திடுக்கிட்ட செய்கிறது. மொத்த வேம்பலையும் கூட பெரிய களவில் ஈடுபடவில்லை என்று தோன்றுகின்து. நாகுவின் மரணத்திற்கு பிறகு கிராம மக்கள் சாய செய்தார்களா என்று தெரியவில்லை. இப்படி நாவல் முழுவதும் பல மரணங்கள் வந்து கொண்டே இருக்கிறது மரணங்கள் ஊடே காலம் நீண்டு நெளிந்து சென்று கொண்டு இருக்கிறது. நாகுவின் ஐய்யா நாவலில் முக்கிய கதாபாத்திரம் பெரிதாக எந்த சண்டையும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போய்விடுகிறார் பல ஆண்டுகள் கழித்து வருகிறார். திரும்பவும் பரதேசியாக போகிறார் ஒரு கோவிலில் நாகு அவரை கண்டுபிடித்து வேம்பலைக்கு கூட்டிவருகிறான். இயலாமையும், இருப்புகொள்ளாமையும், வறுமையும் அவரை அலைக்கழிக்கிறது. பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் ஊகங்கள் வழியாக அவர் வளர்ந்து இருப்பது நம்மையும் அறியாமல் அவர் இறப்பின் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பக்கீரின் கொலையில் அவருக்கு இருக்கும் தொடர்பு பற்றி பேசப்படவில்லை என்பது.

மரணத்தோடு தன் காய்களை நகர்த்தி விளையாடிக்கொண்டிருக்கும் சிங்கி மூலமாகத்தான் ஒரு இடத்தில் களவு வருகிறது. குழந்தைகளின் கழுத்தில் இருக்கும் நகைகளை சிங்கி களவாடுவது இல்லை என்று சொல்லப்படுகிறது இதைத்தவிர களவை மையமாகக் கொண்ட ஒரு நாவலில் களவு பற்றி எங்கும் பெரிதாக பேசப்படவில்லை. அதேபோல் நாவலில் வட்டார வழக்கு மொழிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை அனைத்தும் எழுத்தாளரின் சிறந்த தனித்தன்மையுடைய மொழியின் வாயிலாகவே வெளிப்படுகிறது எந்த கதாபாத்திரமும் அதிகமாக உரையாடுவதே இல்லை. இது நாவளின் தனி சிறப்பாகவே எனக்கு தோன்றுகிறது. ரத்தினா மல்லிகாவை பார்க்க வரும் இடத்தில் எந்த ஒரு உரையாடலோ ஆசிரியரின் வழியாகவோ கூட பேசப்படவில்லை வேம்பின் பெரும் கசப்பு மௌனத்தின் ஊடாக உறைந்து நிற்கிறது. நாவலின் நெகிழ்வான இடம் நீலாவின் சமாதியில் இருக்கு மண் புழுவை கொண்டு வந்து "வீட்டடியிலே இருந்துகோ தாயி..." என்று நாகுவின் ஐய்யா சொல்லும் இடம் இலக்கியத்தின் உச்ச தருணம். கோடைக்காலம், காற்றடிகாலம், மழைக்காலம், பனிக் காலம் என்று நாவல் நான்கு பகுதிகளாக எழுதி இருந்தாலும் அனைத்திலும் உறைவது பெரும் வெய்யில் தான், நாவல் முழுக்க வெயில் வருகிறது, அதே போல் வேம்பின் தீரா கசப்பு, கசப்பு நிறைந்த அந்த மக்களின் வாழ்வை அசைபோட்ட படி குறியீட்டு சித்திரமாக மனதில் பதிகிறது.

நாவலின் இரண்டாம் பகுதி நேரடியாக நவீன வாழ்க்கையை சித்தரிக்கிறது பேருந்து, ஹோட்டல், லாட்ஜ், சாலை, கார் என்று நவீன உலக தொடர்போடு விரிகிறது. வேம்பலையின் இரண்டாம் தலைமுறை திருமால், வசந்தா. காதல் கம்யூனிஸம் பற்றி பேசப்படுகிறது ஆனால் அவர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை வேம்பர்களின் அதே கசப்பு மிகுந்த வாழ்வே எஞ்சுகிறது. லாட்ஜ் லாட்ஜக தனிமையில் சுற்றி திரியும் ரத்தனா தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் தருணம் மீண்டும் அதே கசப்பேறிய வாழ்வின் வெறுப்பு வெளிப்படுகிறது. ஆனால் அவள் விரும்பிப் பெற்றுக் கொண்ட திருமாலின் மீது ஏன் வெறுப்பாகவே இருந்தாள் என்பது புரியவில்லை. ரத்தினா தத்தனேரி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறாள் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர் மதுரையைச் சேர்ந்த ஜி நாகராஜன் தத்தனேரி சுடுகாட்டில் தான் தகனம் செய்யப்பட்டார், ஆக கதை களம் மதுரையை ஒட்டிய பகுதி என்பது உறுதியாகிறது.

வெறுமை நிறைந்த வாழ்வு, வறுமையும், துக்கமும் அன்பும், மரணமும் நிறைந்து நிற்கும் வேம்பலை அதன் முதாதையர்களின் மூச்சு காற்றும் மனிதர்களை வசியப்படுத்தி தன்னுள் இழுத்து கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியே மீண்டும் ஒரு நாகு வேம்பலை நேக்கி போகிறான் அங்கிருந்து அடுத்த தலைமுறையின் கதை தொடங்குகிறது. அரையப்பட்ட ஆணிகளும், காயங்களும் தன்னுள் புதைத்து கொண்டு மீண்டும் பூத்து காய்க்கும் அந்த வேம்பை போல அவர்கள் வாழ்வும் கசபின்றி செழிக்கலாம். "நெடுங்குருதி" வாழ்வின் எதார்த்த கலை இலக்கியத்தின் உச்சம். 

Sunday, August 12, 2018

மூங்கில் கோட்டை - சாண்டில்யன்



நீண்ட நாட்களாக எந்த புத்தகத்தையும் முழுமையாக வாசித்து முடிக்காததால் இந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  பொதுவாக வரலாற்று நாவல்கள் ஒன்று இரண்டு குறிப்புகளை வைத்துக் கொண்டு மொத்த நாவலையும் கற்பனையாக புனையும் வகையை கொண்டது ஒரு தீவிர இலக்கிய வாசகனுக்கு அதனால் வரலாற்று நாவல்கள் சற்று சலிப்பூட்டுவதாகவே அமையும். இளம் வயதில் அரியணை ஏறிய பாண்டிய நெடுஞ்செழியனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த நாவல், சேரர் சோழர் படைகளை வெற்றிக் கொண்டு சேரமானை சிறை எடுத்து ஒரு மூங்கில் கோட்டை அமைத்து அதைச் சுற்றி அகழிகள் அமைத்து மறைத்து வைக்கப்பட்டார். சேரனை விடுவிக்க வந்த அவனது யானைப் படைகள் அருவியில் விழுந்து பாண்டியனின் உத்தியால் தோல்வியுற்றதாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றை வைத்துக்கொண்டு மொத்த நாவலும் புனையப்பட்டிருக்கிறது இதில் வரும் கதாநாயகன் இளமாறனுக்கு எடுத்துச் சொல்லி விளக்கம் கொடுப்பதாக நாவல் முழுக்க அமைந்துள்ளது பொதுவாக சாண்டில்யன் நாவல்களில் கதாநாயகியை வர்ணிக்கவே ஐம்பது பக்கங்கள் எடுத்துக்கொள்வார் இது எனக்கு மிக மிக சலிப்பூட்டுவதாக இருப்பதால் நாம் சாண்டில்யன் புத்தகங்களை தொடுவதே இல்லை ஆனால் விரைந்து வாசிக்க வேண்டும் என்பவர்கள் சாண்டில்யன் போன்ற வரலாற்று நாவல்கள் தான் மிகச்சிறந்த தேர்வு . தமிழகத்தில் இது போன்ற நாவல்கள்தான் அதிகமாக வாசிக்கப் படுகிறது அதனால் இந்த நாவல் இருபத்தி ஐந்து பதிப்புகளை தொட்டிருக்கிறது.