இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Thursday, August 15, 2019

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்



ராஜேஸ்வரி பஸ்  எங்க ஊருக்கு இரண்டு பஸ் வருது ஒரு பஸ் எங்க ஊருரோட  கடைசியா திரும்பி கள்ளக்குறிச்சி போகும், இன்னும் ஒன்னு விழுப்புரம் வரை போகும். இதுவரைக்கும் இந்த பஸ் முதலாளிகள் எல்லாம் எப்படி இதை நடத்துறாங்க நினைச்சு பார்த்தது கூட இல்லை இதில் ஒரு இடத்தில் ராஜேஸ்வரி பஸ்ஸின் முதலாளி செட்டியார் வருகிறார் டிக்கெட்  கலெக்ஷன் குறைவாக இருக்கிறது என்று செக்கரை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்.
" நீ பாட்டுக்கு பின்னாடி சீட்ல ஒட்காந்துகிட்டு வரவ போரவ சூத்துல மூஞ்சிய தேச்சிட்டு  இருந்தா எப்படியா கலெக்ஷன் வரும்"
இதை பார்த்ததும் அங்கு வேலை கேட்டுச் சென்ற தமிழரசனுக்கு மட்டுமல்ல எனக்கும்கூட அதிர்ச்சியாகவே இருந்தது ஒரு முதலாளியின் உண்மை முகத்தை நேருக்கு நேர் நின்று பார்க்கும் போது நம்மையே கதிகலங்க வைக்கிறது.

" தமிழரசன் செட்டியாரு கண்டக்டர் வேலை கேட்டு"

" க்கு‌ம் செட்டியார் மொதல மொழநீட்டு நீட்டிடு செட்டியார்ன மட்டும் இப்பவே மொதலாலியாக்கி உட்டுரன் சரியா?, செட்டி கிட்ட கொஞ்சம் அசந்த அப்பறம் நா உங்கிட்ட சீட்டு கிழிச்சி கொடுக்க நிக்கனும் ஆளயே முழுங்கிடொனுவ செட்டிங்க "

கண்மணி குணசேகரனின் யதார்த்த எழுத்து அற்புதமான கலைப் படைப்பாக கைகூடி வந்திருக்கிறது. கடலூரில் போக்குவரத்து அலுவலக ஊழியரான குணசேகரன் அவரது பணி அனுபவங்கள் தொகுத்து எழுதி இருக்கிறார். ஆறு வருடமாக இந்த கதைக்கருவை எழுதலாம் என்று திட்டம் வைத்திருந்தும் எங்கே இதை எழுதி தன்னை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்தில் எழுதாமல் இருந்ததாக அவரே குறிப்பிடுகிறார் பிறகு ஒருவழியாக எழுதிவிட்டார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் எதுவுமே நடக்கவில்லை ஏனென்றால் அவரது படைப்புகளை யாருமே வாசிக்கவே இல்லை என்பதே காரணம், சரி நானாக புத்தகத்தை கொடுத்து வாசிக்கச் சொல்லியும் பார்த்துவிட்டேன் யாரும் வாசிக்கவேயில்லை  என்று கண்மணி சொல்கிறார்.
 தமிழரசன் அய்யனார் ஏழைமுத்து ஆகிய மூவரும் தற்காலிக பணி ஆட்களாக பெரியார் டிப்போ வேலைக்குச் செல்கிறார்கள் அவர்கள் சந்திக்கும் வேளை சவால்களை அவர்களின் குடும்ப பின்புலத்தையும் சொல்லிச் செல்கிறது நாவல். எங்கேயோ ஒரு அரசு பேருந்து டயர் வெடித்து நிற்கிறதை நாம எல்லோரும் பார்த்திருப்போம் ஆனால் அதற்குப் பின்னாடி ஒரு சீஎல் க்கு பத்து நாள் வேலை போகும் என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. புது டயர் வாங்க வேண்டிய காச எவனோ ஒரு அரசியல்வாதி எடுத்துட்டு போயி வப்பாட்டி ஊட்ல படுத்து கெடந்துட்டு வருவான், ஆனா அதுக்கான தண்டனையை அத்து கூலிக்கு வேலை செய்ர  கடைநிலை ஊழியன் தலையில் விழுகிறது. ஒரு அரசுத்துறை எவ்வளவு ஊழல் மலிந்த தாக இருக்கிறது என்பதை நேரடியாக இதில் பேசப் படவில்லை ஆனால் கதையில் பின்புலத்தில் கதையை இயக்குவது இந்த ஊழல் தான் என்பதை வாசகன் அறியலாம். நகர அரசு பேருந்து என்றால் நம் நினைவுக்கு வருவது ஓட்டை உடைசல் மான ஒரு பேருந்தும் சிடுசிடுப்பு முகத்துடன் உள்ள நடத்துனரும் தான், அந்த முகத்திற்கு பின்னணியில் இருக்கும் காயங்களையும் துயர் மிகுந்த பணிச்சுமைகளை எடுத்துச் சொல்கிறது இப்படைப்பு எதார்த்தமான கதாபாத்திரத்திமும் பேச்சு பொழியும் தொய்வு இல்லாமல் வாசிக்க முடிகிறது. அய்யனார் சந்திரா சந்தித்துக்கொள்ளும் அத்தியாயம், ஏழைமுத்து மனைவி பார்வதியை கம்பளி ஆடு குட்டி போட்டதை வைத்து குழந்தையின்மையை குத்தி காட்டி சண்டை இழுக்கும் அத்தியாயமும் இந்நாவலின் உச்சமான இடம். பேருந்தும் நெடுஞ்சாலையும் பலருக்கு பல நினைவுகளை கொடுக்கிறது காதல் பிரிவு, காயங்கள், மரணங்கள், சண்டை, அடிதடி என்று ஆனால் அதை இயக்கும் நபர்களின் பணிச்சுமையை நான் நேரில் கண்டிருக்கிறேன் சார் சார் கொஞ்சம் பாத்து போடுங்க மூனு நாள எரங்காம ஒட்ரன் சார் என்று சீசன் நேரங்களில் தன் பிஎம் இடம் கெஞ்சும் ஓட்டுநர்களை நான் பார்த்து இருக்கிறேன். அப்படி ராபகலாக கண்விழித்து ஓட்டும் ஓட்டுநர்களுக்கு நடத்துநர்களும் இந்தப் படைப்பை கண்மணி குணசேகரன் அவர்கள் சமர்ப்பித்திருக்கிறார். இதை வாசித்த பிறகு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பார்வை மாறி இருக்கும். கண்மணியின் முக்கிய படைப்பு அவரின் 'அஞ்சலை' கேரளாவில் ஒரு பல்கலைக்கழகம் இதை பாடமாக வைத்து இருக்கிறது அப்படி பட்ட மகத்தான கலைஞன் எங்க மள்ளாடை கொள்ளியில் இருந்து வந்தவன் என்பதே எங்கள் நடு நாட்டிற்கு பெருமை...

இந்தப் புத்தகத்தை கொடுத்து விட்டு கண்மணி குணசேகரனின் "அஞ்சலை" நாவல் இருக்கிறதா என்று நூலகரிடம் கேட்டேன் கண்... மணி... குணசேகரனா...... அவரை இப்பதான் கேள்விபடரேன் தம்பி என்றார்....

Wednesday, April 17, 2019

யாமம் - எஸ் ராமகிருஷ்ணன்



எஸ் ராமகிருஷ்ணனின் வெயிலை போலவே இரவும் எத்தனை இனிமையானதாக இருக்கிறது நெடுங்குருதி வெயில் மையச் சரடாக வும் தொன்மை படிமமாகும் பின்னப்பட்டிருக்கும் இந்த நாவலில் இரவும் வரலாறும் அத்தர் வாசனையும் மையச் சரடாக இருக்கிறது. 
யாமம் என்றால் இரவு, இரவை போல விளங்கமுடியாத இருளாக மனிதர்களும் அவர்களின் அகமும் இருக்கிறது என்பதையே இந்த யாமம் . ஒரு ஞானியிடம் இருந்து அத்தர் தயாரிக்கும் முறையை பெறும் அப்துல் கரீம் இரவை போல சுகந்தம் தரும் யாமம் என்ற வாசனை திரவியம் கண்டுபிடிக்கிறார். உயர்குடி முதல் சாதாரண மக்கள் வரை அந்த அத்தரை வாங்கிப் பூசிக் கொள்கிறார்கள் மதி மயக்கும் அதன் வாசனை காமத்தையும் கிளறுவதாக இருக்கிறது. 


இந்த நாவலில் முதன்முதலில் என்பதே வரலாறாக மாறுகிறது முதல் முதலில் வெள்ளைக்காரர்கள் மிளகு வாங்கி விற்பதற்காக இங்கிலாந்தில் இருந்து வருகிறார்கள் பிறகு கரையானைப் போல் இந்த தேசத்தை சுரண்டுகிறார்கள். அதே போல முதன் முதலில் நில அளவைகள் எங்கிருந்து யாரால் தொடங்கப்பட்டது, சென்னை நகரத்தை ஒயிட் டவுன் பிளாக் டவுன் என்று இரண்டாகப் பிரிப்பது, முதல் தேயிலை இந்திய வருகை, முதல் கிறிஸ்தவ மதமாற்றம் இப்படி நாவலில் பின்னணியில் வரலாற்று இழையோடுகிறது. அந்த வரலாற்றில் விசித்திர நிகழ்வுகள் விசித்திர மனிதர்கள் சுவடே இல்லாமல் மறைந்து போன துயரமிகு வாழ்வின் வரலாற்று மீள்பதிவே யாமம்.

சதாசிவ பண்டாரம் காரணமே இல்லாமல் திருநீலகண்டம் என்ற நாய் சென்ற இடமெல்லாம் அலைந்து திரிந்து நாய் போன போக்கில் தன் வாழ்வை செலுத்தி இறுதியில் பட்டினத்தார் சமாதியில் முக்தியடைகிறார். வாழ்வில் எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் விட்டு பண்டாரம் கண்ட வாழ்வின் தரிசனத்தை நம்மையும் அடைய வைக்கிறது. நேர் எதிரில் வெள்ளைக்காரர்கள் நாய்களை வாங்கி வருவதும் பிறகு ஒரு வருடம் கழித்து அதுகளை வேட்டையாடிக் கொள்வதும் விசித்திரம் தானே?

கிருஷ்ணப்ப கரையாளர் சொத்துக்காக லண்டன் வரை கூட வழக்கை எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார் ஆனால் அவரே தான் எந்த சொத்தும் பணமும் வேண்டாம் என்று கடைசியில் மறுக்கிறார். அவர் எலிசபெத்துடன் மலைக்குச் சென்று இயற்கையோடு தன் வாழ்க்கையை கழிக்கும் போது மனமாற்றம் அடைகிறார். இயற்கைக்கு மாறுதல் என்பது மனிதன் இயல்புக்கு திரும்புதல் என்ற என்றாகிறது இல்லையா?. எலிசபெத்தின் குழந்தைகால நினைவுகள், துயரங்கள் பின்பு அவள் வேசியாக மாறுவது என்பவையெல்லாம் வெளியேறமுடியாத இதய குமிழியாக இதயத்தில் எங்கோ தங்கிவிடுகிறது.

லண்டனில் போகத்திற்கான இடமாக நினைக்கும் சற்குணம் பிறகு லண்டனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக புரட்சியாளனாக மாறுவது வியப்பான தருணம். 

" லண்டன் மீதான எனது கனவுகள் கலைந்து போய் விட்டன லண்டன் ஒரு பொதுக் கழிப்பிடம் போல் உள்ளது" 

" இப்படி நாய்க்கு எலும்புத் துண்டை தூக்கி எறிவது போல் உன்னை போன்ற அறிவாளிகளை சமூகத்தைப் பற்றி சிந்திக்கவிடாமல் செய்கிறார்கள்" 

- நாவலில் இருந்து. 



லண்டனுக்கு கணிதம் கற்க செல்லும் திருச்சிற்றம்பலம் திரும்பி வரும்போது காமத்தால் சிதைந்து போன குடும்பங்களையும் உறவுகளை இருந்தான். இதே போல தான் ராமானுஜம் கூட கணிதத்திற்கு வாழ்கை அற்பணித்து அவதியுற்றார். தையல் நாயகியின் பத்திரகிரி உறவையும் தொடக்கத்தில் கசப்பாக என்னும் பகுதியில் மனைவி விசாலா பிறகு அதை அதன்போக்கில் ஏற்றுக் கொள்கிறாள். இதில் வரும் மனிதர்கள், வாழ்வு தன் கையின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவிய ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களாக இருக்கிறார்கள். (தையல் திருச்சிற்றம்பலம் மனைவி)


யாமம் கண்டுபிடித்த கரீம் ஒரு கட்டத்தில் குதிரை பந்தயத்தில் மீது ஆசை வந்து அனைத்து சொத்துக்களையும் இழந்து ஒரு நாள் திடீரென்று காணாமல் போகிறார். பிறகு ஆண் வாரிசு இல்லாத அவரின் மூன்று மனைவிகள் சுரையா, வஹிதா, ரஹ்மானி ஆகிய மூவரும் வறுமையோடு வாகையையும் சேர்ந்து சுமக்க வேண்டியதாகிவிடுகிறது. பிறகு காலரா சென்னை மாகாணத்தை தாக்குகிறது பின் மரணஓலங்கள் எங்கும். நான்கு மாறுபட்ட நாவல்களை ஒரே நாவலில் சேர்த்து வாசிப்பதை போல இருக்கிறது எல்லாவற்றையும் இனைக்கும் மையமாக வரலாறும் காமமும் வாசனையின் சுகந்தமும் இரவும் இருக்கிறது. 

Saturday, January 19, 2019

வெக்கை - பூமணி



ஒரு ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் பூமணி அவர்கள் படைப்பை வாசிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய  'வெக்கை' நாவலை வாசிக்க எடுத்தேன். நான் இலக்கியத்திற்கு மிகமிக புதியவன் என்பதால் அந்த நாவலில் வட்டார வழக்கு சுத்தமாக என்னால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பிறகு ஓராண்டு கழித்து இப்போது அந்த நாவலை வாசித்து முடித்தேன்.

" சிரம்பரம் நினைத்தது அப்படியில்லை, அவன் வலது கையை மட்டுமே துண்டிக்க நினைத்திருந்தான்"

என்று தொடங்கும் நாவல், அடுத்து என்ன என்று வாசகனை மேலும் வாசிக்க தூண்டுவதற்கான சிறு உத்தி இது. ஆனால் இந்த நாவலில் நாவல் முடியும் வரையிலும் வாசகனுக்கான இடம் வாசகனின் பங்களிப்பை கோரும் இடங்கள் அதிகம், சொல்ல பட்டதை வைத்து ஒரு வாசகன் சென்றடைய வேண்டிய இடங்கள் நிறைய விடப்பட்டு இருக்கிறது அது ஒரு மெல்லிய ரகசியம்போல் நாவல் முழுக்க பயணிக்கிறது. வடக்கூரான் செலம்பரம் அய்யா வைத்திருக்கும் சிறு நிலத்தை அபகரிக்க நினைக்கிறான் அது முடியாமல் போகவே செதம்பரனின் அண்ணனை கொலை செய்கிறான், அந்த கொலைக்கு பழிவாங்கி விட்டு செதம்பரமும் அவன் அய்யாவும் தலைமறைவு வாழ்கை வாழ்கிறார்கள். இந்த நாவலை வகைப்படுத்த வேண்டும் என்றால் 'தலித்திய நாவல்' என்று சொல்லலாம் அவனால் பூமணி ஒரு நேர்காணலில் "இலக்கியத்தில என்ன தலித் இலக்கியம், கொங்கு இலக்கியம், கரிசல் இலக்கியம் எல்லாம் 'இலக்கியம்' அவ்ளோ தான்" என்று குறிப்பிட்டுள்ளார் அதனால் தலித்ய பார்வையை தவிர்த்து பார்த்தால். எதார்த்த இலக்கியத்தில் எழுத்தாளரின் மிகை புனைவு இல்லாமல் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது, எளிய மக்கள் வலிமை வாய்ந்த மனிதனையோ அரசையோ, சட்டத்தையோ எவ்வாறு எதிர்க்க முடியும் என்று புரட்சிகர கூச்சல் இல்லாமல் எதார்த்தமாக பதிவு செய்ய இருக்கிறார். மொத்தம் மூன்று கொலை நடக்கிறது, செதம்பரம் செய்த கொலைக்கு மட்டும் அவர்கள் துரத்தபடுகிறார்கள் மற்ற இரண்டு கொலையும் கண்டுகொள்ளபடவில்லை. இதன் காரணமாக சட்டத்தின் மீது சாமானியர்களுக்கு ஏற்படும் அதிர்ப்தியை நாவல் முழுவதும் விவாதிக்க படுகிறது.

'உள்ள வெச்ச கைவக்ரதுலாம் பெறுமையா'

'உனக்கு இல்ல அவனுக்கு இருக்கே '

'இந்த போலிசு எதுக்கு நம்ம குண்டிக பிண்ணாடியே திரிரான்'

'இந்த சட்டம் கிட்டம் எல்லாம் இருக்க கொடாது அனைக்குத தெக்க அப்பவே சூட்டோட சூட ஒடனே தண்டனை சொல்லுடனும்'

'துட்டுகையேரிச்சுன விட்ல தொல்ல படுத்துவாங்களே '

' சாராயக்காரர்கள் போலீசை கண்டால் தலைமறைவாகி விடுவார்கள், பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள் என்பதற்காக அல்ல ஓசியில் சாராயம் ஊற்றி முடியாதே, அது மட்டுமில்லாமல் மாமூல் வேறு கொடுக்க வேண்டும், கறி தின்ன காசு கொடுக்க வேண்டும், மாதம் ஒரு கேஸ் கொடுக்க வேண்டும்'.

இங்கு சட்டங்கள் என்பது எளியவர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையாகவே இருக்கிறது. சட்டம் சமமற்றதாக இருக்கும் போது இந்த நாட்டின் மீது இருக்கும் பற்றிலிருந்து எளிய மக்கள் விலகிச் செல்கிறார்கள். ஆனால் எந்த நிலையிலும் அறத்தையும் மானுட நியாயங்களையும் கைவிடாத மனிதர்கள் அவர்கள். களவுக்கு செல்பவர்கள் கூட ஏழைகள் கஷ்டப்படும் சம்சாரிகளின் நிலத்தில் களவு செய்வதில்லை சிதம்பரத்தின் அண்ணன் ஆடு மேய்க்கும் போது எந்த சம்சாரிகளின் வயலிலும் ஒரு சிறு பயிரை கூட மேய விடுவதில்லை. சிதம்பரமும் அவன் அய்யாவும் தலைமறைவாக இருக்கும் காலத்தில் உணவு சமைக்க ஒரு பனை மரத்தில் பதனிக்காக கட்டப்பட்டிருக்கும் பானையை எடுத்து வந்து சமைக்கிறார்கள், மீண்டும் அதே மரத்தில் பானையை கொண்டு கட்டிவிட்டு தான் அந்த இடத்தில் இருந்து புறப்படுகிறார்கள். அவர்கள் அலைந்து திரியும் போது மிகுந்த தாகத்தில் ஒரு தக்காளித் தோட்டத்தைப் கடக்கிறார்கள் அப்போது சிதம்பரத்தின் ஐயா சொல்கிறார்..

' இரண்டு பழத்த பிடுங்கி வாயில்  நமட்டிகிரயா, தண்ணீ தாகம் அடங்குமே'

' பாவம் அவன் என்ன பாடுபட்டு தண்ணீர் எறச்சானோ, அவ வயித்துல அடிக்கவா, கிணத்துல தண்ணி இருந்தால் குடிப்போம் இல்லைன்னா அடுத்த இடம் போவோம்'

வாழ்க்கையில் எதுவும் இல்லாவிட்டாலும் அந்த கரிசல் காட்டு மக்கள் வாழ்வை பேர்ருவகையுடனே வாழ்கிறார்கள், அதை நோக்கி அவர்களை செலுத்துவது அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு தான். செலம்பரம், அய்யா, ஆத்தா, மாமா, சித்தி என்று அவர்கள் வைத்திருக்கும் அன்பும் பினைப்பும் வியக்க வைக்கிறது " அன்புடையார் எம்பும் உரியர் பிறர்க்கு என்றால்" அது இந்த கரிசல் மக்கள் தான். நாய விட்டு வந்துடோம் பவம் கஞ்சி குடிக்காம எலச்சி போயிருக்கும் என்று அவர்கள் நாயையும் சேர்த்தே தன் குடும்பமா நினைக்கிறார்கள். வதமிழில் முக்கியமான நாவல்களில் இது ஒன்று என எஸ் ராமகிருஷ்ணன் ஜெயமோகன்( கலை படைப்பு முழுமையாக கைகூடாத) குறிப்பிட்டுள்ளார்கள். வெக்கையாக தான் இருக்கிறது இன்னும் அவர்களின் நிலமும் மனமும்......