இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Friday, July 7, 2023

கொமோரா- லஷ்மி சரவணகுமார்








கோமோரா - லஷ்மி சரவணகுமார் 
ஒரு கேள்வியில் இருந்து இந்த நாவலை அணுகலாம், மனிதர்கள் ஏன் இவ்வளவு மோசமான குரூரமான வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்?. கதிரின் பதின் பருவத்தில் துவங்கும் நாவல் அவனின் இளமைக்காலத்தில் முடிகிறது அனைவராலும் கைவிடப்பட்ட புறக்கணிக்கப்பட்ட ஒருவனை இந்த சமூகம் மூர்க்கத்தனமான வதைக்கும் போது மனிதர்கள் மீதான வெறுப்பாகவும் வன்முறையாகவும் மாறுகிறது. அதே நேரத்தில் கொடூரமான போரில் இருந்து தப்பி பிழைக்கும் அழகர்சாமி போன்றவர்கள் எவ்வாறு வன்முறையாளர்களாக மாறுகிறார்கள் என்பது வரும் இறுதி அத்தியாயம் மொத்த நாவலையும் இதுவரை வாசித்து வந்த வாசகனின் பார்வையை மொத்தமாக புரட்டி போட்டு நாவலை மறுபரிசீலனை செய்ய சொல்கிறது. இறுதி அத்தியாயத்திற்கு முன்பு கூட வேறு ஒரு கோணத்தில் தெரியும் நாவல் இறுதி அத்தியாயத்தில் மொத்தமாக மாறிவிடுகிறது. அதே போல் இன்னொரு இடம் விஜி அப்பா மரணம் வெறுப்பின் வழியே வரும் நாவல் இங்கே மறுபரிசீலனை செய்ய சொல்கிறது ஆனாலும் அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆதரவு இல்லாமல் அனாதை கிறிஸ்துவ பள்ளியில் வதைபடும் கதிரும், கம்போடியா இன படுகொலையில் வதைபட்டு தப்பி பிழைக்கும் அழகர்சாமியும் வாழ்வின் மீதான சரி தவறுகளை கணக்கிடும் காலமாக இருக்கிறது. அழகர்சாமி கொல்லப்படும் இடத்தில் அவருக்காக சில நொடிகள் பரிவு தோன்றுகிறது. அதே போல கதிரின் நியாயங்களை முறையாக நாம் மனதில் ஏற்படுத்த நாவல் தவறுகிறது . குறிப்பாக ஆரூன்சாமி வரும் இடம் கதிரின் பக்கத்தை நாயபடுத்த மன்டுமே வலிய உருவாக்க பட்டு நாவலுக்கு வெளியே நிற்கிறது. கம்போடிய இனப்படுகொலை வரும் இடங்கள் மிக விரிவான ஒரு சித்தரத்தை அழிக்க தவறிவிட்டது என்று நினைக்கின்றேன் வெறும் தகவலாக நின்று விடுகிறது. இவ்வளவு பெரிய நாவலில் முக்கியமான இடம் என்றால் சரியாக வந்து இருப்பது 

 சக்தி-முருகன்-கதிர் இவர்களுக்குள் நிகழும் புரிதல்கள் குறிப்பாக முருகனுக்கும் கதிருக்கும் இருக்கும் உறவை தெரிந்து கொண்ட பிறகும் சக்தி அவர்களை அவ்வளவு இயல்பாக ஏற்றுக் கொள்ளும் இடம் சக்தியை மொத்த நாவலிலும் முக்கியமான ஒரு பாத்திரம் காட்டிவிடுகிறது. எல்லாம் தெரிந்தும் கதிரின் அம்மாவை பார்த்து கொள்ள அரசு மருத்துவமனைக்கு செல்கிறாள் இறுதி வரை அவனோடு நல்ல உறவில் இருக்கிறாள்.

 கதிர் - சத்யா காதலை எழுத்தாளர் எந்த விதத்தில் நாயபடுத்துகிறார் என்று தெரியவில்லை. ஒரு சாராய வியாபாரி கஞ்சா வியாபாரி வறுவாய்க்கு வழி இல்லாத ஒரு லும்பன் கல்லூரி படிக்கும் சத்தியாவை (17 வயது) காதல் என்று இழுத்து கொண்டு ஓடுவதை அப்படியே அந்த பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எவ்வாறு நினைக்கிறார். (அந்த பெண்னை அந்த குடும்பம் கொலை செய்து விடுகிறது. இது இந்தசமூகத்தின் நோய்கூறு சாதி வன்முறை) . ஒரு முறை வாசிக்க வேண்டிய நாவல் தானா ? இல்லையா? விளிம்பு நிலை மனிதர்களை வைத்து எழுதப்படும் படைப்புகள் இறுதியில் பொதுவாக ஏமாற்றத்தை தருகிறது. இந்த நூலும் அதையே செய்கிறது.

Kindle பதிப்பில் ஒரே எழுத்து பிழை .. ஒரு இடத்தில் முருகன் என்று வரவேண்டும் ஆனால் கதிர் என்று இருக்கிறது.. கதிரை கதிரே எப்படி அழைத்து செல்ல முடியும்.

Sunday, May 7, 2023

காலா பாணி


பிரிட்டிஷ் அரசு இந்த மண்ணில் நாடு பிடிப்பதற்காக செய்த கொடுமைகள் ஏராளம் ஏராளம். நயவஞ்சகதந்தால் குறுக்கு வழியில் ஏமாற்றி இங்கே அதிகாரத்திற்கு வந்து சொந்த நாட்டு மக்களை அடிமை படுத்தினார்கள் . தங்கள் மண்ணையும் அரசையும் இந்த கயவர்கள் இடம் இருந்து காப்பாற்ற இந்தியாவிலே முதல் முதலாக மக்களை ஒன்று திரட்டி போர் செய்தவர்கள் சின்ன மருது, பெரிய மருது, கட்ட பொம்மன் வேலுநாச்சியார் ஊமைத்துரை போன்றவர்கள் . காளையார் கோவில் போர் என்று வரலாற்றில் அழைக்கப்படும் இந்த போரில் எந்த விசாரணையும் இல்லாமல் ஐநூறு பேர் தூக்கிலிடப்பட்டனர் குழந்தைகள் முதியவர்கள் என்று அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு ஊர் நடுவில் தொங்கவிட்டு பொது மக்களை பயமுறுத்தினார்கள். சின்ன மருது மக்களை திரட்ட 'ஜம்பு தீவு' என்ற பிரகடனத்தை வெளியிட்டார் முதல் முறையாக இதற்கு பிரிட்டிஷ் அரசு இரண்டு முறை பதில் பிரகடனம் வெளியிட்டது. தெற்கில் சிவகங்கை சீமை பிரிட்டிஷ் அரசுக்கு பெரிய தலைவலியாக இருந்தது ஐநூறு பேரை தூக்கிலிடப்பட்ட பிறகு சிவகங்கை அரசர் வேங்கை வயல் வேங்கை பெரிய உடையணத் தேவன் ( வேலுநாச்சியார் , பெரிய மருது வின் மருமகன்) சின்ன மருதுவின் மகன் துரை சாமி , கட்ட பொம்மன் வளர்ப்பு மகன் தளவாய் குமாரசாமி நாயக்கன் ஆகிய 73 பேரை காலா பாணி என்று பினாங்கு தீவிற்கு முதல் முறையாக நாடு நடத்தினார்கள். கல் கையில் விலங்கோடு நடந்தே தூத்துக்குடி துறைமுகம் வரை அழைத்து வந்து அட்மிரல் நெல்சன் கப்பலில் பினாங்கு அனுப்பபடுகிறார்கள் முறையான உணவு தண்ணீர் இல்லாமல் வழியிலேயே  மூவர் இறந்து போனார்கள், பினாங்கு தீவில் பலர் இறக்க பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆகிறார்கள். பிறகு இரும்பு வெட்டும் சுரங்கங்களில் கூளிவேலைக்கு செல்கிறார்கள். 

ஒரு இடத்தில் வேங்கை பெரிய உடையன் சொல்வார்கள்
 " இனி நாம நம் கரிசல் செம்மண்ணை எப்போதும் போர்போமோ இல்ல பாக்காமலே போய்டுவோமோ"  என்று வாசகன் மனம் உடைந்து விடுகிறது. 

மால்பரோ கோட்டையில் இருட்டில் அடைக்கப்பட்ட வேங்கையாள் அங்கு முதல் முறையாக கொடுக்காபுளி மரம் நடப்பட்டது. அந்த இரண்டு மரம் இன்றும் இருக்கிறது என்பதை நினைத்தால் அந்த மரத்தை கட்டிக்கொள்ள ஆசை வருகிறது.

 வெறும் 35 வயதில் துரைசாமியும் 34 வயதில் வேங்கை வயல் பெரிய உடையார் தேவரும் இறந்து போனார்கள் என்பது நெஞ்சை உலுக்க கூடியதாக இருக்கிறது . தன் அரசை காப்பாற்றவும் சொந்த மண்ணில் விடுதலைக்குப் போர் செய்ததற்காகவும் இந்த மண்ணில் இருந்து கண் காணாத தீவிற்கு அவர்களை நாடு கடத்தியது ஆங்கில அரசு.  அந்த 73 பேரையும் கிட்டத்தட்ட என்று தமிழகம் இன்று மறந்தே போய்விட்டது அவர்களை மீண்டும் இந்த நூல் நமக்கு வெளிகாட்டி இருக்கிறது. எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் வாழும் பூர்வகுடி  மக்களை கொத்துக்கொத்தாக தூக்கிலிடும் போது அந்த மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் ?  அவர்கள் இந்த ஆங்கிலேயர்களை எதிர்ப்பதை தவிர வேறு என்ன வழி அவர்களுக்கு இருந்திருக்கிறது ஆனால் அவர்கள் அதற்காக எவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பது கண் முன்னே நமக்கு இருக்கும் வரலாறு .அப்படிப்பட்டவர்களின் தியாகத்தால் எண்ணற்றவர்களின் உயிரின் விலையும் சேர்த்து தான் இன்று இந்த நாடு சுதந்திரம் அடைந்து இருக்கிறது.ஆனால் இன்றைய அரசியல்வாதிகள்‌ . தங்கள் சுடுகாட்டிற்கு கோடிகளில் செலவு செய்து பளபளக்கும் கற்களை பதித்துக் கொள்கிறார்கள். பேனாவிற்கு சிலை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தங்கள் உயிரையே இந்த நாட்டிற்காக கொடுத்த எண்ணற்ற வீர மறவர்கள் இந்த மண்ணில்  அடையாளமே இல்லாமல் போய்விட்டார்கள் என்பதை நினைக்கும் போது தான் இன்றைய அரசியல்வாதிகள் மீது கடுமையான  சினமும்  வெறுப்பும் வருகிறது. 

வேங்கை பெரிய உடையணத் தேவன் அவர்கள் சகாக்கள் பாதத்தில் என் சென்னியை வைக்கிறேன். 

Wednesday, November 2, 2022

அஞ்சலை - கண்மணி குணசேகரன்


குத்துற ஒரலுக்கு ஒரு பக்கம் அடி, அடிக்கிற மத்தாலத்துக்கு ரெண்டு பக்கமும் அடி , சுத்துற ரொப்பு உரல் குழவி கல்லுக்கு எல்லா பக்கமும் அடி . அப்படித்தான் ஆகிப்போச்சு அஞ்சலை வாழ்க்கை எல்லா பக்கமும் அடி ,துன்பம் கண்ணீர் அவமதிப்பு, ஏமாற்றம். அவ வாழ்க்கை முழுவதும் ஊர் மக்கள் சொல்லும் வாய் பேச்சும் வம்பு பேச்சும் தான் முடிவு செய்யுது. நடவு நட பேன எடத்துல காட்டுகாரன் மவன் கூட சிரிச்சி பேச ஊரு கதை கட்ட இவளுக்கு கல்யாணம் பன்னிடலாம்னு ஆத்தா காரி முடிவு பன்ன, அவ மருமவன் கிட்ட சொல்ல நானே இவள ரெண்டாம் தரமா கட்டிக்கிரேனு அக்கா வீட்டுகாரன் சொல்ல முடியாதுனு தலையாட்டிடுறா அஞ்சலை.இருடி உன்ன பாத்துக்கிறேன்னு அவள பழிவாங்குறான் அக்கா வீட்டுகாரன். அப்பன் இல்லாம கம்முனாட்டிய கெடந்து  மூனு பொட்ட பிள்ளையும் ஒரு ஆம்பளை பிள்ளையும் வளந்தா அவ ஆத்தா காரி கல்யாணி அவள சுளூவா எல்லாரும் ஏமாத்தி போடறாங்க. பிறகு அவள் வாழ்க்கை எங்கெங்கு லோல் பட்டு இந்த சமூகத்தின் கொடிய கரங்களால் கிழிக்கப்பட்டு எறியப்படுகிறாள் இறுதியாக நம் கண் முன் எஞ்சும் அஞ்சலை இந்த சமூகத்தின் கோர கரங்களால் கிழித்து எறியப்பட்ட வெறும் குப்பையாகவே காட்சி அளிக்கிறாள்.

இந்த நாவலில் முதன்மையாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது இந்த சமூகத்தில் நிலவும் வன்முறை மனநிலையும் ஆணாதிக்க போக்கும் ஒரு பெண்ணின் வாழ்வை எவ்வாறு சிதைத்து போடுகிறது என்பதை காட்டுகிறது. மொத்த நாவல் முழுவதுமே பெண் என்பவள் ஒரு பொருட்டாகவே எங்கேயும் யாராலும் மதிக்கப்படவில்லை. அஞ்சலையின் தம்பி கூட ஓரளவு கல்வி அறிவு பெற்ற பின்பு கூட நிலாவை கைவிடும் இடம் குறிப்பாக சொல்ல வேண்டும். அதற்கு அவன் சொல்லும் காரணம் வேறு என்றாலும்  வாசகர்கள் அதன் அடித்தளத்தை அறிந்து கொள்வார்கள். மண்ணாங்கட்டி மட்டுமே சற்று அஞ்சல இடம் தாழ்ந்து செல்கிறான் அதுவே கூட அவனின் ஊனம் மற்றும் இயலாமையில் வெளிப்பாடால்தான் என்று நாவல் இறுதியில் அவன் அஞ்சலையை அடிக்கும் போது புரிந்து கொள்ளலாம் . மண்ணாங்கட்டி இடமிருந்து அஞ்சலையில் பிரிந்து சென்று நிலாவை பெற்று கார்கூடலில் விட்டுவிட்டு வந்த பிறகும் கூட மண்ணாங்கட்டி அவளை ஏற்றுக் கொள்கிறான் ஆனால் நிலாவை அவன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதற்கும் காரணம் அஞ்சலையாகத்தான் தெரிகிறது அவள் திரும்பி வந்த பிறகும் கூட மண்ணாங்கட்டியிடன் நெருக்கமும் பரிவும் இல்லாதவே காலத்தை தள்ளுகிறாள் அதன் காரணமாகவே நிலா மீது எந்த அக்கறையும் இல்லாதவனாக ஆகிவிடுகிறான். இதில் வரும் மக்கள் அனைவரும் அடுத்தவரின் மகிழ்ச்சியை அபகரிப்பதிலும் புறம் பேசி வம்பு வளர்ப்பதிலும் பிரதானமாக இருக்கிறார்கள் ஒருவகையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையின் மீதான வெறுப்பும் அதீத உடல் உழைப்பால் தன்னையே நொந்து கொண்ட மனநிலையும் சிறிதளவு எனும் தனக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லாத சூழலும் அவர்களுக்கு இவ்வாறான பிக்கல் பிடுங்கள் குணத்தை அளிப்பதாக நினைக்கின்றேன். 

குறைத்து காட்டப்பட்டாலும் அஞ்சலியை விட நிலாவின் சித்திரமே வலுவானதாக எனக்கு படுகிறது ஏனென்றால் கல்யாணியை விட அஞ்சலை மனதில் உறுதியும் பிடிக்கும் அற்றவளாகவே இருக்கிறாள் அதன் காரணமாக ஒவ்வொரு இடமாக தாவித்தாவி செல்கிறாள் ஆனால் கல்யாணி உடலில் இரத்தம் ஓடும் வரை உழைத்து வாழ்வேன் என்கிறாள். பீங்கான் தொழிற்சாலையில் அஞ்சலை வேலை செய்துவிட்டு உடல் முழுவதும் பீங்கான் மாவோடு தெருவில் வந்து நிலாவை சந்திக்கும்போது நிலா எந்தவித முகசுலிப்பும் இல்லாமல் அன்போடு தாயை எதிர்கொள்கிறாள் இந்த இடத்தில் நிலாவின் சித்திரம் வேறொரு தலத்திற்கு செல்கிறது குறிப்பாக இந்த தலைமுறை பிள்ளைகள் காரணம் இல்லாமல் பெற்றோர்களிடம் விளக்கத்தை அடையும்போது நிலா அதிலிருந்து மாறுபட்டவளாக இருக்கிறாள். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள போகும் அஞ்சலையிடம் "கம்மனாட்டி மவளே நீ ஏண்டி சாகப்போற யாரும் இல்லாமல் நான் தாண்டி சாகனும் ஒரு பத்து நாள் வாழ்ந்து புட்டா எல்லாம் சரியா போயிடும்"  என்னும் இடத்தில் நிலா இன்னும் வாழ்வின் மீதான தெளிந்த பார்வையும் பிடிப்பும் கொண்டவளாக ஆகிவிடுகிறாள். அவள் கை பிடித்து அஞ்சலை துணிவோடு நடக்கும் இடம் நாவல் அழகியல் தளத்திலும் எதார்த்த தளத்திலும் வலுவான ஒரு மொழி தளத்திலும் தன்னை நிறுவிக் கொள்கிறது. நாவலின் கட்டுமானத்தில் கண்மணி குணசேகரனின் வட்டார வழக்கு பேச்சு மொழி இன்னொரு வலுவை சேர்க்கிறது. 

வைரமுத்துவின் " கருவாச்சி " கவனிக்கப்பட்ட அளவிற்கு கண்மணி குணசேகரனின் "அஞ்சலை" கவனிக்கப்படாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

- சந்தேகமே இல்லாமல் தமிழ் சமுகம் ஒரு பில்ஸ்டைன் சமூகம் தான்- 

 ''சோறு அடுப்பிலயும் - எங்க சுந்தரனார் தொட்டிலுல! நான் சோத்த எறக்குவனா ஏஞ் சுந்தரனாரத் தூக்குவனா? பாலு அடுப்பிலயும் - ஏம் பாலகனார் தொட்டிலுல! நான் பால எறக்குவனா - ஏம் பாலகனத் தூக்குவனா?''

நெடுஞ்சாலைக்கு பிறகு கண்மணி குணசேகரனின் அஞ்சலை நான் இரண்டாவதாக வாசித்த புத்தகம் இரண்டுமே எந்த வகையிலும் என்னை ஏமாற்றவில்லை .