இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Sunday, October 12, 2025

சிற்பியின் வயிற்றில் முத்து

சிற்பியின் வயிற்றில் முத்து- போதிசத்வ மைத்ரேய

தமிழாக்கம் - சு . கிருஷ்ணமூர்த்தி 

1959 ஆம் ஆண்டு வங்காள மீன் வளத் துறையில் இருந்து இந்திய மீன்வளத்துறைக்கு மாறுதல் ஆகி தூத்துக்குடி மாவட்ட அதிகாரியாக வந்த போதிசத்வ மைத்ரேய பரதவர் வாழ்க்கை அவர்களின் கடல்சார் வாழ்வு தொழில், சேரிகளின் நிலை, தேவதாசி வாழ்க்கை, அன்றைய அரசியல் நிலை, வா .ஊ. சி போராட்டம், இசை, கலை , சுதந்திர இந்தியாவின் மக்கள் நிலை, முதல் தேர்தல் என்று தமிழர்கள் வாழ்வின் வழி நீண்ட வாழ்க்கையும் வரலாற்றையும் பதிவு செய்து இருக்கிறார். இருப்பது வருடம் ஒரு முறை இருமுறை அல்ல பத்து முறை திருத்தி மாற்றி மாற்றி எழுதி இருக்கிறார் அப்போது திருப்தி வரவில்லை என்று சொல்கிறார். வங்காள பத்திரிகையில் தொடராக வந்து பெரும் வரவேற்பு பெற்றது இந்த நாவல், தமிழர்கள் கூட பதிவு செய்யாத பகுதியை மிக கூர்ந்து நோக்கி ஒரு வங்க எழுத்தாளர் பதிவு செய்து இருப்பது பெரும் வியப்பாக உள்ளது. 

காட்வின் ஃபெர்னாண்டோ மிகப்பெரிய தொழிலதிபர், எந்த அளவுக்கு என்றால் இலங்கை பிரதமர் சேனநாயக்கா இவரது நண்பர் இப்படி பலர். மிகப்பெரிய அரண்மனை போன்ற வீடு மனைவி இல்லை மகன் இல்லை நோயின் பிடியில் மரணப்படுக்கையில் இருக்கும் காட்வின் தன் கடந்த கால நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு கிடக்கிறார். தனது நண்பனின் கொலைக்கு பழிவாங்க முடியாது ஆற்றாமை அவரை வாட்டுகிறது. மகன் இவரை விட்டு ஓடிப்போய் பதிமூன்று ஆண்டுகள் ஆகிறது இந்த பிரம்மாண்டமான சொத்துக்களை என்ன செய்வது என்று அவர் சிந்தனையில் எண்ணங்கள் சுழல்கிறது. பீட்டர் பெயரில் அணைத்து சொத்தையும் எழுதி வைக்கிறார், இவரின் மகன் இலண்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே வேலை செய்கிறார். செய்தி வந்ததும் ஊருக்கு வருகிறார். இந்தியா சூழல் அந்தோனி முகத்தில் அறைகிறது, அதிலும் மீனவ சேரில் அவன் கண்ட காட்சி இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைகிறான். " சேரியில் ஒரு சட்டியில் இருக்கும் சோற்றுக்கு ஒரு குழந்தையும் ஒரு பன்றியும் அடித்துக் கொள்ளும் காட்சி" வெறும் எலும்பும் தோலுமான அம்மணமான குழந்தைகள், மேல் உடலை மறைத்து கொள்ள கூட ஆடை இல்லா பெண்கள், மெலிந்த ஆண்கள் என்று அவன் காணும் கட்சி அவனை இந்த நாட்டு அரசின் மீது கோபத்தை வர வைக்கிறது. சுதந்திரம் கிடைத்ததும் நாட்டில் எல்லாம் மாறும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு மேலும் அதிர்ச்சி, புற்றில் இருந்து கிளம்பிய நாகங்களாக புதிய அரசியல் நுழைந்த நபர்கள் ஊழல் திருட்டு அடிதடி கொள்ளை என்று கிளம்ப சுதந்திர போராட்ட தியாகிகள் மறைக்கப்பட்ட நாபர்களாக ஆகிறார்கள். புரட்சி வரும் எல்லாம் மாறும் என்று பேசும் கம்யூனிஸ்ட்களை நினைத்தாலே அரசுக்கு ஆகாது ஆகவே அவர்களை தேடித்தேடி வேட்டையாடுகிறது. 

ராஜாஜி ஆட்சியில் தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது ஆனால் மது சர்வ சாதாரணமாக அனைத்து இடங்களிலும் புழக்கத்திலும் இருக்கிறது. ராமன் தனது தந்தை தாசி வீட்டிற்கு செல்வதை கடுமையாக எதிர்க்கிறான் அவனுக்கு அவனின் தாய் தாசி என்றாலே மோசம் என்று சொல்லி சொல்லி வளர்கிறாள். ஆனால் ராமன் இசையும் நாட்டியமும் முறையாக கற்ற பிறகு தேவதாசிகள் என்பவர்கள் வெரும் தாசித் தொயில் செய்பவர்கள் மட்டும் அல்ல அவர்களின் நடனம் மிகச் சிறந்த கலை அம்சம் பொருந்திய ஒன்று என்று நினைக்கிறான் . எந்த தாசிகளை வெறுத்தானோ அதே தாசியை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்குகிறான். அதே நேரத்தில் ராஜாஜி தேவதாசிகள் வெறும் வேசி தொயில் செய்பவர்கள் என்று தேவதாசி ஒழிப்பு முறை சட்டத்தை கொண்டு வருகிறார். இதை எதிர்த்து மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒரு ஆசிரியர் மரணிக்கிறார். ராஜாஜி நாட்டியத்தையும் பரத கலையையும் வெறும் தாசித்து தொயில் என்று நினைத்தாள் அதை ஒழிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று முழங்கி விட்டு மேடையில் இறந்து விடுகிறார். இப்படி பல்வேறு சமூக கலை இலக்கிய நிகழ்வோடு நாவல் நமக்குள் நிகழத் தொடங்குகிறது ஆகவே மிகச் சிறந்த வாசிப்பு அனுபவத்தை இந்த நாவல் நமக்கு அளிக்கிறது. கீழே தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் இசையையும் இசை மேதைகளையும் வங்காளத்தில் இருந்து வந்த ஒருவர் இவ்வளவு நுணுக்கமாக எழுதி இருப்பது ஆச்சரியம். அவருடைய ஆர்வம் உண்மையிலேயே பிரம்மிப்பை அளிக்கிறது. திருவாசகத்தை சொல்லுகிறார் ,திடீரென்று தமிழ் பழமொழியை சொல்லுகிறார் தமிழ் இசை பற்றி பேசுகிறார் உண்மையிலேயே ஒரு பறந்து பட்ட தமிழக மக்களையும் வரலாற்றையும் வங்காளிகளுக்கு அறிமுகம் செய்தது இந்த எழுத்தாளரின் மகத்தான பணி. வங்காளிகளும் இதை வாசித்து கொண்டாடி இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் மேலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

தமிழகத்தில் கொற்கை முத்து உலக பிரசிதம் பெற்றவை கடலில் மூழ்கி 50 60 அடி ஆழம் சென்று முத்து எடுக்கும் பரதவர்கள் அந்தத் தொழிலில் இருந்து பிரிட்டிஷியர் காலத்தில் அவர்களை வெளியேற்றிவிட்டு வெறும் முத்தெடுக்கும் கூலிகளாக அவர்களை ஆக்குகிறது. பிறகு சுதந்திர இந்தியாவிலும் அவர்களை கூலியாகத்தான் வைத்திருக்கிறது. ஒரு சிப்பிக்கு 25 பைசா அவர்களுக்கு கூலி ஒருவர் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து சிற்பியை மட்டுமே எடுக்க முடியும் அப்போது அரிசியின் விலை 40 ரூபாய் ஒரு மூட்டை. முத்தெடுக்க மூழ்கும் போது மூச்சு திணறி இருந்தும் போகிறார்கள். ஆகவே பரதவர்கள் கொடுமையான வறுமையிலும் பசியிலும் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். சுதந்திரம் கிடைத்தால் தங்கள் வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நினைத்திருந்த அவர்களுக்கு எழுந்து வரும் முதலாளித்துவம் பெறும் ஏமாற்றத்தையே அளிக்கிறது. சுதந்திரம் அடைந்த ஐந்து ஆண்டுகளிலேயே மக்கள் இந்திய அரசின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கிறார்கள் அவ்வளவு குழப்பங்கள் குளறுபடிகள் மக்களாட்சி புதிய அரசு அமைந்த உடன் நடைபெறுகிறது. ஆனால் உண்மையில் இன்று நினைத்துப் பார்த்தால் அன்றைய தலைவர்கள் மிகச்சிறந்த வழிமுறைகளை தேர்வு செய்து மெல்ல மெல்ல அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு வந்து புதிய மக்களாட்சியை நிறுவியது ஆச்சரியப்பட வைக்கும் விடையம். 

முதலாளித்துவம் உருவாகி வரும் போது கூடவே போட்டி பொறாமை பகை வளர்ந்து வருகிறது இறுதியில் கொலையில் போய் அது முடிகிறது. இதில் வரும் கதாநாயகனும் அப்படியான ஒரு கொலைக்கு பழிவாங்கலாகவே காத்திருக்கிறான். 

வங்க இலக்கியத்தை வாசிக்க வாசிக்க அதன் ஆழமும் விரிவும் நமக்கு தெரிய தொடங்குகிறது. இந்திய இலக்கியத்தில் மிகச்சிறந்த படைப்பாக இதை கருதத் தகுந்த எல்லா அம்சமும் நிறைந்து உள்ளது தமிழகத்தில் நிகழும் கதையை ஒரு வங்காள எழுத்தாளரின் எழுத்தில் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும். 

வழக்கம்போல நேஷனல் புக் டிஸ்ட் இந்தியா இந்த நூலை பதிப்பிக்காமல் விட்டுவிட்டது. இந்த பழைய பதிப்பிலும் ஏகப்பட்ட எழுத்துப் பிழை மோசமான அச்சு போன்றவை வாசிக்க சிரமமாக இருக்கிறது. பிரிண்ட் ஆண் டிமாண்ட் வந்துவிட்ட இந்த காலத்திலும் மிகச் சிறந்த நல்ல இந்திய படைப்புகளை காப்புரிமை வைத்துக்கொண்டு சாகித்திய அகடமியும் நேஷனல் புக் டிஸ்ட் இந்தியாவும் மறு பதிப்பு செய்யாமல் பல அரிய நூல்களை மக்கள் வாசிக்க கொடுக்காமல் இருக்கிறார்கள். ஒரு அரசு அலுவலகம் வேறு எப்படி இருக்க முடியும் இந்த நாட்டில் !?.